எரிபொருள் விலை அதிகரிப்பு; உள்நாட்டு விமானச் சேவைகளுக்குப் பாதுகாப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு; உள்நாட்டு விமானச் சேவைகளுக்குப் பாதுகாப்பு

2 mins read
452e8411-37aa-4974-a461-1081ac23fb1f
உள்நாட்டில் வழங்கப்படும் விமானச் சேவைகளைப் பாதுகாக்கிறது இந்திய அரசாங்கம். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: எரிபொருள் விலை அதிகரிப்பால் உள்நாட்டில் வழங்கப்படும் விமானச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய கிழக்குப் பூசல் காரணமாக உலகளவில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்தச் சூழல் உருவாகியுள்ளது.

இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான இந்திய எண்ணெய் நிறுவனம், விமான இயந்திர எரிபொருள் (ஏடிஎஃப்) விலையை புதன்கிழமை (ஏப்ரல் 1) இரட்டிப்பாக்கியது. அதன்படி ஏப்ரல் மாதத்துக்கான எரிபொருள் விலை ஆயிரம் லிட்டருக்கு ரூ. 207,000ஆக (2,845 வெள்ளி) இருந்தது. ஆனால், சில மணிநேரத்துக்குப் பிறகு விலை ரூ. 104,000க்குச் சரிந்தது.

பாதி அளவு விலை அதிகரிப்பை மட்டுமே அனுமதிக்கப்போவதாக இந்திய அரசாங்கம் கூறியது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து உள்ளுர்ச் சந்தையில் எரிபொருள் விலை 100 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு இடம்பெற்றது.

விலை அதிகரிப்பால் உள்நாட்டில் விமானச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டது. இதன்படி அரசாங்கத் துறையில் எண்ணெய் விளம்பர நிறுவனங்கள், சிவில் விமானத்துறை அமைச்சுடன் கலந்துபேசி பாதி அளவு மட்டும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளன. அதேபோல், விமான நுழைவுச்சீட்டுக் கட்டணங்கள் படிப்படியாக அதிகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையின்படி உள்நாட்டில் விமானச் சேவைகளுக்குக் கிட்டத்தட்ட 25 விழுக்காடு விலை உயர்வு மட்டுமே இருக்கும் என்று என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது. உலகளவில் காணப்படும் விலை உயர்வு உள்ளூர் விமானச் சேவைகளுக்குப் பொருந்தாது என்று அரசாங்கம் குறிப்பிட்டது.

எனினும், அனைத்துலகப் பயணங்களை வழங்கும்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு முழுவிலை உயர்வு பொருந்தும். உலகச் சந்தைகளுக்கு ஏற்றவாறு விலை இடம்பெறும். பயணிகள், விமானத் துறை ஆகிய இரு தரப்புகளையும் இந்த அணுகுமுறை பாதுகாக்கும் என இந்திய விமானத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.

“சுமுகமான முறையில் மாற்றங்களை உள்ளடக்கிப் பின்பற்றப்படும் இந்த அணுகுமுறை, பயணிகளுக்கான கட்டணம் பெரிய அளவில் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும், உள்நாட்டு விமானச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும், இந்த முக்கியமான காலகட்டத்தில் விமானத் துறை தொடர்ந்து நிலைத்தன்மையுடன் இருக்க ஆதரவளிக்கும்,” என்று அவர் விவரித்தார்.

இந்த அணுகுமுறை, சரக்குகளை அந்தந்த இடங்களுக்குக் கொண்டுசேர்ப்பதற்கும் வர்த்தகம், தளவாடம் தொடர்பான காரணங்களுக்காக முக்கியமான இடங்களுக்குத் தொடர்ந்து விமானச் சேவைகளை வழங்குவதற்கும் வகைசெய்து ஒட்டுமொத்தப் பொருளியலைப் பலனடையச் செய்யும் என்றும் அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்