புதுடெல்லி: இந்தியா முழுவதும் எரிபொருள் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட விலை உயர்வு வெள்ளிக்கிழமை (மே 15) நடப்புக்கு வந்தது.
தமிழ்நாடு, அசாம், கேரளம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்து 16 நாள்களுக்குப் பிறகு எரிபொருள் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி மோதல் உருவான பின்னர், அனைத்துலக அளவில் எண்ணெய் விலைகள் ஏற்றம் கண்டபோதிலும், சட்டமன்றத் தேர்தலின்போது இந்தியாவில் எண்ணெய் விலைகள் உயர்த்தப்படவில்லை.
உயர்த்தப்பட்ட பின்னர், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.106.68, டீசல் விலை ரூ.93.14. சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 103.67, டீசல் விலை ரூ. 95.25.
மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) கட்டமைப்புகளுக்கு ஏற்ப, எரிபொருள் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவது வழக்கம்.
ரஷ்யா - உக்ரேன் போர் தொடங்கிய காலத்தில் 2022 ஏப்ரலில் எரிபொருள் விலைகள் மாற்றமின்றி முடக்கப்பட்டன. 2024 மார்ச்சில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் எரிபொருள் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது.
மேற்கு ஆசியாவில் தொடர்ந்துவரும் மோதல்களுக்கு மத்தியில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் அதிகரித்துவரும் இழப்புகளைச் சமாளிக்க முடியாமல் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் திணறி வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
மோதல் ஏற்படுவதற்கு முன்பு, பீப்பாய்க்கு USD70 முதல் USD72 வரை என்ற வரம்பிற்குள் இருந்த எண்ணெய் விலைகள், போர்ப் பதற்றத்தின் உச்சக்கட்டத்தில் பீப்பாய் விலை USD120க்கு மேல் சென்றது. பின்னர், விலை சற்று தணிந்ததன் காரணமாக, தற்போது பீப்பாய்க்கு USD104 முதல் USD110 என்ற அளவிலேயே நீடித்து வருகின்றது.
எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
இந்நிலையில், எரிபொருள் விலைகள் 3 ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் கட்சி ‘எக்ஸ்’ தளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. “பணவீக்க நாயகரான மோடி மீண்டும் ஒருமுறை பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்,” என்று அதில் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
“தேர்தல்கள் முடிந்துவிட்டன; ‘மோடியின் வசூல் வேட்டை’ தொடங்கிவிட்டது,” என்றும் அது தெரிவித்துள்ளது.
திரிணாமூல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ’பிரையனும் எரிபொருள் விலை உயர்வை விமர்சித்ததுடன், தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசு மக்கள்மீது சுமையை ஏற்றுவதாகக் கூறியுள்ளார்.

