புதுடெல்லி: உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகும் நிலையில், டெல்லி அரசு ஊழியர்கள் வாரத்துக்கு இரண்டு நாள்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என அம்மாநில முதல்வர் ரேகா குப்தா அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், வாரந்தோறும் கார் பயன்படுத்தாத நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டும், வாரத்தில் ஒரு நாள் அனைவரும் மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட மேலும் சில கட்டுப்பாடுகளையும் அவர் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்குப் பகுதியில் தொடர்ந்து மோதல் நிலவி வரும் சூழல் காரணமாக, அனைத்துலக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் சமையல் எரிவாயுக் கலன், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகப்படுத்துவது தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் குடிமக்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், டெல்லி அரசும் தனது பங்கிற்கு சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி, 50 விழுக்காடு அரசு அலுவல் ஆலோசனைக் கூட்டங்கள் இணையம்வழி நடத்தப்பட வேண்டும் என்றும் டெல்லி மாநகராட்சி தனது ஊழியர்களின் பணி நேரங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
டெல்லி மக்கள் பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். வாரந்தோறும் இரு நாள்களுக்கு அனைவரும் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்த ஏதுவாக, ‘மெட்ரோ மண்டே’ என்ற நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் என்றார் அவர்.
டெல்லியில் உள்ள 29 அரசுக் குடியிருப்புகளில் 58 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் டெல்லி அரசு அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்தவிதப் புதிய வாகனக் கொள்முதலையும் மேற்கொள்ளாது என்றும் முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.


