பயணக் கட்டணத்துடன் எரிபொருள் கட்டணம்: இண்டிகோ முடிவு

பயணக் கட்டணத்துடன் எரிபொருள் கட்டணம்: இண்டிகோ முடிவு

2 mins read
d3d8bbd7-90fb-4443-9af1-03291682b57b
மேற்காசிய போர்ச்சூழல் காரணமாக விமான எரிபொருளின் விலையும் கணிசமாக உயர்த்திருப்பதாக அனைத்துலகச் சந்தை விவரங்கள் தெரிவிக்கின்றன. - கோப்புப்படம்: டெக்கான் குரோனிக்கல்

புதுடெல்லி: இனி பயணக் கட்டணத்துடன் எரிபொருள் கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் கூடுதல் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ எரிபொருள் கட்டணம் குறித்து வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டது.

அதில், விமானங்களை இயக்க ஏற்படும் செலவில் சுமாா் 40 விழுக்காடு அதன் எரிபொருளுக்குச் செலவாகிறது என்றும் மேற்காசியப் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, சனிக்கிழமை (மாா்ச் 14) முதல் இண்டிகோ விமான பயணச்சீட்டு கட்டணத்துடன் எரிபொருள் கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்காசிய போர்ச்சூழல் உலக அளவில் பல நாடுகளில் பல்வேறு வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு புது விவகாரமாக உருவெடுத்துள்ளது. தற்போது விமானக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்தியாவுக்குள் இயக்கப்படும் விமானங்கள், இந்திய துணைக் கண்டத்துக்கான சேவையை அளிக்கும் இண்டிகோ விமானங்களில் இனி வழக்கமான கட்டணத்துடன் எரிபொருள் கட்டணமாக ரூ.425 வசூலிக்கப்படும்.

இந்த எரிபொருள் கட்டணமானது மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் ரூ.900ஆகவும், தென்கிழக்கு ஆசியா, சீனா, ஆப்பிரிக்காவுக்குப் பயணிக்கும் விமானங்களுக்கு ரூ.1,800ஆகவும் இருக்கும்.

ஐரோப்பாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் கூடுதலாக ரூ.2,300 எரிபொருள் கட்டணம் செலுத்த தயாராக வேண்டும்.

மேற்காசிய போர்ச்சூழல் காரணமாக விமான எரிபொருளின் விலையும் கணிசமான அளவில் உயர்ந்திருப்பதாக அனைத்துலகச் சந்தை விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை (மார்ச் 12) உள்நாட்டுச் சேவை அளிக்கும் விமானங்களுக்கு வழக்கமான தொகையுடன் கூடுதலாக, ரூ.399 எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்படும் என ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் அறிவித்தன.

பின்னர் அந்நிறுவனங்கள் அனைத்துலக விமானக் கட்டணங்களையும் உயர்த்தின. விமான நிறுவனங்கள் அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளால் தங்களின் பொருளியல் சுமைகள் அதிகரிக்கும் எனப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்