கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்

2 mins read
2b94cf52-de21-42df-9e33-577d144f6168
மகாரா‌ஷ்டிரா அமைப்பினரை கண்டித்து முழு அடைப்பு நடத்திய கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு. - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மகாரா‌ஷ்டிரா அமைப்பினரைக் கண்டித்து சனிக்கிழமை (மார்ச் 22) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

பெரும்பாலான இடங்களில் முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடந்தது. சாலைகள் வெறுச்சோடி இருந்தன. மைசூர் பகுதியில் பிரச்சினை செய்ததாகக் கிட்டத்தட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் 21ஆம் தேதி பெலகாவி பகுதியில் மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசுப் பேருந்து நடத்துநர்மீது மகாரா‌ஷ்டிரா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த விவகாரம் கர்நாடகா - மகாரா‌ஷ்டிரா இடையே மொழி பிரச்சனையாக மாறியது.கர்நாடகத்தில் மகாரா‌ஷ்டிரா மாநில பேருந்துகளும், மகாரா‌ஷ்டிராவில் கர்நாடக அரசு பேருந்துகளும் தாக்கப்பட்டன.

இந்த விவகாரம் இரு மாநிலங்களிடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு மாநிலங்களிடையே இயல்பு நிலை திரும்பியது.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் மகாரா‌ஷ்டிரா அமைப்பினரை கண்டித்து முழு அடைப்பு நடத்துவதாகக் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

அதன்படி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த முழு அடைப்புக்கு அனைத்துத் தரப்பு மக்களும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த முழு அடைப்புக்கு கர்நாடக ரக்ஷண வேதிகே உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன.

கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், பெங்களூரு மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு வழங்கியுள்ளன. ஆனால் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த முழு அடைப்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. கன்னட அமைப்பினர் பெங்களூரில் ஊர்வலம் நடத்தினர்.

குறிப்புச் சொற்கள்