தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பதிலடி தர ஆயுதப்படைக்கு முழு சுதந்திரம்: மோடி

2 mins read
b9d00bb6-53f7-48f7-b051-4ea6afeacf42
செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தலைமை பாதுகாப்புத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் ஆகியோர் பங்கேற்றனர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய ஆயுதப் படைகளின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பழிதீர்க்க ஆயுதப்படைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாதத்தை முழு வலிமையுடன் எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தலைமை பாதுகாப்புத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் ஆகியோர் பங்கேற்றனர்.

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே தலைமைத் தளபதி அனில் சௌஹான் உள்ளிட்ட சில அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவை குறித்து செவ்வாய்க்கிழமையன்று மேலும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பயங்கரவாதத்தை முறியடிப்பதே இந்தியாவின் முதன்மைக் குறிக்கோள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் கூறி உள்ளார்.

“இந்திய ஆயுதப் படைகளின் தொழில்முறைத் திறன்கள் மீது நாடு முழு நம்பிக்கை வைத்துள்ளது. ஆயுதப் படைகளுக்கான அரசாங்கத்தின் முழு ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

“நமது பதிலடி, இலக்குகள், நேரத்தைத் தீர்மானிப்பதற்கு ஆயுதப் படைகளுக்கு முழு செயல்பாட்டுச் சுதந்திரம் உள்ளது,” என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தி உள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கான எதிர்வினையாக அதற்குக் காரணமான பயங்கரவாதிகள் கடும் தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று இந்திய அரசு ஏற்கெனவே சூளுரைத்திருந்தது.

இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது.

கடந்த ஐந்து நாள்களாக எல்லையில் ஊடுருவ முயற்சி மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே தொடர் மோதல் நடைபெற்று வருகிறது.

இந்தியா எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று அந்நாட்டு அமைச்சர் அட்டாயுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

இந்த நம்பகமான தகவல் உளவுத்துறை மூலம் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

“எந்தவோர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் எதிராக பாகிஸ்தான் உறுதியான பதில் அளிக்கும். இந்த வட்டாரத்தில் ஏதேனும் கடுமையான விளைவுகள் ஏற்பட்டால், அதற்கு இந்தியாதான் பொறுப்பேற்க வேண்டும்,” என்றார் அட்டாயுல்லா தரார்.

குறிப்புச் சொற்கள்