மகாகும்ப நகர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கவிருக்கும் நிலையில் ஒன்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கும் திட்டம் அங்கு தொடங்கப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும் ஒன்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) தொடங்கி வைத்தார்.
‘அம்மாவின் சமையலறை’ என்று பொருள்படும் ‘மா கி ரசோய்’ (Maa Ki Rasoi) சமூக சமையலறைத் திட்டத்தை ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் ஏழை மக்களுக்காகத் தொடங்கி வைத்த முதல்வர் அங்கிருந்தோருக்கு உணவு பரிமாறினார்.
பருப்பு, நான்கு சப்பாத்திகள், காய்கறி, சாப்பாடு, சாலட் உள்ளிட்டவை அடங்கிய முழு சாப்பாடு வெறும் ஒன்பது ரூபாய்க்கு ஏழை மக்களுக்கு வழங்கப்படுகிறது.
மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து வரும் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் உணவு தயாரிக்கும் முறை, உணவின் அளவு, தயாரிக்கப் பயன்படுத்தும் பொருள்கள் என அனைத்தையும் ஆய்வு செய்தார்.
அங்கு ஒரே நேரத்தில் 150 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு இடவசதி உள்ளது.
மேலும், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கி இருப்பவர்களுக்கு ஒன்பது ரூபாய் சாப்பாடுத் திட்டம் பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.