போபால்: கேட்போரின் உள்ளத்தைத் தொடும் பாடல்களாலும் பொன்னான குரலாலும் பெரிதும் அறியப்பட்ட இந்தியப் பாடகி பலக் முச்சல் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.
ஆயினும், அது அவரது இசைப் பயணத்திற்காக அன்று.
பலக்கின் மனிதநேயப் பணிகளுக்காக அவ்விரு சாதனைப் புத்தகங்களும் அவரைப் பெருமைப்படுத்தியுள்ளன.
தம்முடைய பலக் பலாஷ் அறநிறுவனத்தின் மூலமாக, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 3,800க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு இவர் நிதியுதவி அளித்துள்ளார்.
இவரது அறப்பணி இளவயதிலேயே தொடங்கிவிட்டது.
குழந்தைப் பருவத்தில் மேற்கொண்ட ரயில் பயணத்தின்போது வசதிகுறைந்த பிள்ளைகளைக் காண நேர்ந்தது இவரது வாழ்க்கைப் பயணத்தையே மாற்றியது.
“அவர்களுக்கு ஒருநாள் உதவுவேன்,” என்று அப்போதே தமக்குள் ஓர் உறுதி எடுத்துக்கொண்டார் 33 வயது பலக்.
அந்த மனவுறுதியே பல ஆண்டுகளுக்குப் பிறகு பலக் ஓர் அறநிறுவனத்தைத் தொடங்க உந்துதலாக அமைந்தது. இசைக்கச்சேரி மூலமாக ஈட்டப்படும் பணத்தையும் தம் சொந்தச் சேமிப்பையும் கொண்டு, அந்த அறநிறுவனத்தின் மூலமாக உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் ஆதரவளித்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கார்கில் போரில் மாண்டோரின் குடும்பத்தினர்க்கும் குஜராத் நிலநடுக்கத்தில் மாண்டோரின் குடும்பத்தினர்க்கும் இவர் நிதியுதவி வழங்கினார்.
பலக்கின் இந்தத் தொண்டூழியத்திற்கு அவரின் கணவரும் இசையமைப்பாளருமான மிதுனும் உறுதுணையாக இருந்துவருகிறார்.
“இசைக்கச்சேரி இல்லை என்றாலும், வருமானம் இல்லை என்றாலும் ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சை ஒருபோதும் நிற்க விடமாட்டோம்,” என்று முன்பொருமுறை மிதுன் கூறியிருந்தார்.
நிதிச் சிக்கல் இருந்தாலும் தங்களது அறப்பணி ஒருபோதும் தடைபடாது உயிர்ப்புடன் இருக்கும் என்பதை அவரது இக்கூற்று உறுதியாக உணர்த்துவதாக இருக்கிறது.

