தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி: ஆறு மாநிலங்களில் ‘என்ஐஏ’ சோதனை

2 mins read
ed69df8c-953d-42b0-8331-7b8772096550
பங்ளாதேஷைச் சேர்ந்த அல் காய்தா பயங்கரவாதிகள் இந்திய இளைஞர்களை இழுக்க தீவிர முயற்சி செய்து வருவதாகக் கூறப்பட்டது. - கோப்புப்படம்: ஊடகம்

பெங்களூரு: பயங்கரவாத அமைப்பான அல் காய்தாவுக்கு நிதியுதவி வழங்கிய விவகாரம் தொடர்பாக கர்நாடகா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பங்ளாதேஷில் செயல்படும் அல் காய்தாவுக்காக இந்தியாவில் சிலர் நிதி திரட்டி வருவதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடகா, மேற்குவங்கம், பீகார், திரிபுரா, அசாம், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 9 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நவம்பர் 11ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பேசிகள், மடிக்கணினி மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

“பங்ளாதேஷைச் சேர்ந்த அல் காய்தா பயங்கரவாதிகள் இந்திய இளைஞர்களை இழுக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அல் காய்தாவுக்காக நிதி திரட்டி வருகின்றனர்.

“இதுதொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 12 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நால்வர் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது மீண்டும் பங்ளாதேஷில் இருந்து அல் காய்தா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.

“நவம்பர் 11ஆம் தேதி கர்நாடகா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் சோதனை நடத்தினோம். பீகாரில் சீவான் நகரை சேர்ந்த பழ வியாபாரி அக்தர் அலியின் வீடு, கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. ஆவணங்களை சரிபார்த்த பிறகு அக்தர் அலியும் அவரது இரு மகன்களும் கைது செய்யப்படலாம்,” என என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்