சூளகிரி: சூளகிரி அருகே சாமல் பள்ளம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை தொடர்ந்து, மேலுமலை மேம்பாலமும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதனால் பயண நேரம் குறையும் என்று வாகனமோட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில், ஓசூர் சிப்காட் ஜங்ஷன், கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உட்பட, ஆறு இடங்களில், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கின.
கடந்தாண்டு இறுதியில், சாமல்பள்ளம் மேம்பாலம் வாகனப் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. தொடர்ந்து, மேலுமலை மேம்பாலம் கடந்த வாரம் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் வரும் வாகனங்கள் செல்லும் வகையில், ஒருபுறம் மட்டும் திறக்கப்பட்டது.
மற்றொரு புறம் பணிகள் நடந்து வந்தன. அப்பணிகளும் முடிந்த நிலையில், மே 6ஆம் தேதி செவ்வாய் முதல், இருபுறமும் வாகனங்கள் செல்ல மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சிப்காட் ஜங்ஷன், போலுப்பள்ளி ஆகிய இரு இடங்களில், 70 விழுக்காட்டுப் பணிகள் முடிந்துள்ளன.
அதேபோல, சுண்டகிரி, கோபசந்திரம் பகுதியிலும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகளை விரைவுபடுத்தி ஓரிரு மாதங்களுக்குள் முடிக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பெங்களூர் செல்லும் பயண நேரம் குறையும்.