தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடராஜர் வலம் வரும் கஜ வாகனம் சேதம்

2 mins read
5d1f73c8-1687-4f3f-bb4e-e7573572e878
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளி கஜவாகனம் சேதமுற்றதால் ஆனி உத்திரத்தை முன்னிட்டு தங்கப்பல்லக்கில் வலம் வந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். - படம்: தமிழ் முரசு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி நடராஜர் ஆண்டுக்கு இருமுறை எழுந்தருளும் வெள்ளி கஜவாகனம் சேதமுற்றதால் ஆனி உத்திரத்தை முன்னிட்டு தங்கப்பல்லக்கில் வலம் வந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மீனாட்சி அம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழா நடந்து வருகிறது. இது, தமிழ் மாதம் அடிப்படையில் நடக்கிறது. தற்போது ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் ஜூலை 8 வரை ஊஞ்சல் உற்ஸவம் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆனி உத்திரமான ஜூலை 1ஆம் தேதி இரவு முதல் ஜூலை 2ஆம் தேதி அதிகாலை வரை வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர், சிவகாமியம்மனுக்கு இரண்டாம் பிரகாரம் நுாறு கால் மண்டபத்திலும் திருமஞ்சனம் நடந்தது. இதனையடுத்து ஜூலை 1ஆம் தேதி காலை நடராஜர் மாசிவீதிகளில் உலா வந்தார் என்று தினமலர் தகவல் தெரிவித்தது.

ஆனி உத்திரத்தன்று நடராஜர் வெள்ளி கஜவாகனத்தில் வீதி உலா வருவது வழக்கம். ஆனால் ஜூலை 1ஆம் தேதி தங்கப்பல்லக்கில் வலம் வந்தது.

ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அதாவது மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரத்தன்று மட்டுமே வெள்ளி கஜ வாகனத்தில் நடராஜர் வலம் வருவதைப் பார்க்க முடியும்.

“வெள்ளி கஜவாகனம் லேசாக சேதமடைந்துள்ளது. அதில் நடராஜரை எடுத்துச்செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது என பட்டர்கள் தெரிவித்ததால், தங்கப்பல்லக்கில் வீதி உலா வர ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளி கஜவாகனம் உட்பட சில வாகனங்கள் சேதமடைந்துள்ளன. அதையெல்லாம் மதிப்பீடு செய்து குடமுழுக்கை முன்னிட்டு சீரமைக்க ஏற்பாடு செய்யப்படும்,” என்று கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்