புதுடெல்லி: இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளன்று (அக்டோபர் 2 புதன்கிழமை) இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர்.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்குச் சென்று மலர்தூவி வணக்கம் செலுத்திய பிரதமர் மோடி, “மதிப்பிற்குரிய மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினேன். தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் காந்தி, உண்மை மற்றும் அகிம்சைக் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றி, உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்களின் தலைமுறைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்,” என்று தமது எக்ஸ் ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், காந்தியடிகளின் வாழ்க்கை, உண்மை, நல்லிணக்கம், சமத்துவத்தின் அடிப்படையிலான கொள்கைகள் நாட்டு மக்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கின்றன என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.
அதிபர் முர்மு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், புதுடெல்லி முதல்வர் அதிஷி உள்ளிட்ட தலைவர்களும் காந்தி நினைவிடத்திற்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
“வாழவேண்டுமானால் அச்சமின்றி வாழ வேண்டும். உண்மை, அன்பு, கருணை, நல்லிணக்கம், அனைவரையும் ஒன்றிணைக்கும் பாதையில் நடக்க வேண்டும் என்று காந்தி நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி,” என்று திரு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் அக்டோபர் 2 என்பதால், அவரது நினைவிடத்திற்கும் சென்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
“‘ஜெய் ஜவான், ஜெய் கிஷான்’ என்ற முழக்கத்தை எழுப்பிய லால் பகதூர் சாஸ்திரி தமது வாழ்க்கையை நாட்டின் வீரர்கள், விவசாயிகளுக்காக அர்ப்பணித்தவர், அவரது எளிமையும் நேர்மையும் அவருக்கு மிகுந்த மரியாதையைப் பெற்று தந்தன,” என்று திரு மோடி கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு, பள்ளிக் குழந்தைகளுடன் பிரதமர் மோடி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
தொடர்புடைய செய்திகள்
நாட்டு மக்களைத் தங்கள் சுற்றுப்புறங்களில் தூய்மை பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்ட அவர், இதுபோன்ற முயற்சிகள் தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு வலுச்சேர்க்கும் என்றும் சொன்னார்.

