பிள்ளையார் சிலைகள் கரைப்பு; கடற்கரையில் குவிந்த 40 டன் குப்பை

2 mins read
8e8f1e1f-98be-4545-b15f-7ea117e471fa
ஞாயிற்றுக்கிழமை பல இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பிள்ளையார் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. - படம்: பாலிமர் நியூஸ் இணையம்

சென்னை: பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு (ஆகஸ்ட் 27) சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட இந்தச் சிலைகளுக்குக் கடந்த 5 நாள்களாகப் பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று (ஆகஸ்ட் 31) பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.

காலை 11.30 மணி முதலே பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, அண்ணா நகர், கொளத்தூர், பூக்கடை, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகள் ஆட்டோக்கள், மினி லாரிகள் மற்றும் லாரிகளில் வைத்து ஊர்வலமாகப் புறப்பட்டுப் பட்டினப்பாக்கம் கடற்கரையை நோக்கிச் சென்றன.

ஊர்வலத்தில் மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க, வாகனங்களில் ஒலிபெருக்கி முழங்க, பிள்ளையார் பாடல்களும் பிள்ளையார் பற்றிய முழக்கங்களும் விண்ணதிர பிள்ளையார் சிலைகள் ஆடியசைந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையை அடைந்தன என்று தினத்தந்தி தகவல் தெரிவித்தது.

அங்கு 2 பெரிய பாரந்தூக்கிகளும் ஒரு பொக்லைன் இயந்திரமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. கடற்கரை மணற்பரப்பில் பிள்ளையார் சிலைகளை எளிதாக நகர்த்துவதற்காக இரும்பினாலான நகரும் மேடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்துக்கு கொண்டுவரப்பட்ட சிலைகள் ராட்சத பாரந்தூக்கிகள் மூலம் கடலுக்குள் பத்திரமாக இறக்கி, கரைக்கப்பட்டன.

இந்த நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் பிள்ளையார் சிலை கரைப்பை அடுத்து ஞாயிறு இரவு வரை 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது.

கரை ஒதுங்கும் மரச்சட்டங்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றுவது, பாரந்தூக்கிகளை நிறுத்துவதற்காக போடப்பட்ட மணல் மேடை ஆகியவற்றை அகற்றும் பணிகள் மறுநாள் திங்கட்கிழமை தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்