மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பிள்ளையார் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வில் நால்வர் உயிரிழந்தனர். 13 பேரைக் காணவில்லை.
அந்த மாநிலத்தின் நந்தேட், நாசிக், தானே, அமராவதி ஆகிய மாவட்டங்களில் அந்த அசம்பாவிதம் ஏற்பட்டது.
ஆகஸ்ட் 27ஆம் தேதி பிள்ளையார் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளைக் கரைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7) நாடு முழுவதும் நடைபெற்றது.
அப்போது கடலில் சிலர் மூழ்கினர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. மாலை வரை நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 13 பேரின் கதி என்னவென்று தெரியாததால் அவர்களிலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, மும்பையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற பிள்ளையார் சிலை ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் இறந்ததாக செய்தி வெளியானது.
சகினாகா பகுதியில் அறுந்து தொங்கிய மின்சாரக் கம்பி மீது சிலை ஒன்று உரசியது. அதன் வழியாக, அருகில் இருந்த 36 வயது ஆடவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
அந்தச் சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்ததாக மும்பை நகராட்சி அதிகாரிகள் கூறினர்.