கண்ணூர்: பரிசுச்சீட்டுக் குலுக்கலில் தமக்கு ரூ.1 கோடி ($142,531) விழுந்ததை அடுத்து, தம்மை ஒரு கும்பல் கடத்திச் சென்று, அந்தப் பரிசுச்சீட்டைப் பறித்துக்கொண்டதாக ஆடவர் ஒருவர் கேரள மாநிலக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
பேராவூரைச் சேர்ந்தவர் ஏ.கே. சாதிக், 46. கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நடந்த ஸ்திரீ சக்தி பரிசுச்சீட்டுக் குலுக்கலில், அவர் வாங்கிய பரிசுச்சீட்டிற்கு முதல் பரிசாக ரூ.1 கோடி விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை (ஜனவரி 14) இரவு ஐவர் அடங்கிய கும்பல் தம்மைக் கடத்திச் சென்று, அந்தப் பரிசுச்சீட்டைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதன் தொடர்பில், மறுநாள் வியாழக்கிழமை சாதிக் காவல்துறையிடம் புகாரளித்தார்.
பரிசு விழுந்ததும் உடனடியாகப் பணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாதிக் அதனைக் கள்ளச் சந்தையில் விற்க முயன்றதாகக் காவல்துறை தெரிவித்தது. பரிசுத்தொகையின் ஒரு பகுதி வரியாகப் பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பர் ஒருவர் மூலமாக அந்த ஐவர் கும்பலில் ஒருவரை சாதிக் தொடர்புகொண்டார் என்றும் அவரும் பரிசுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு பணம் வழங்க ஒப்புக்கொண்டார் என்றும் காவல்துறை விளக்கியது.
பேசியபடி, புதன்கிழமை இரவு 9 மணியளவில் சாதிக்கும் அவரின் நண்பரும் பேராவூர் நகரிலுள்ள குறிப்பிட்ட ஒரு பகுதிக்குச் சென்றனர்.
ஆனால், அங்குக் காத்திருந்த கும்பல் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக ஒரு காருக்குள் ஏற்றிச் சென்றது என்றும் சிறிது தொலைவு சென்றதும் சாதிக்கின் நண்பர் விடுவிக்கப்பட்டார் என்றும் காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
காருக்குள் இருந்த சாதிக்கை மிரட்டி, அவரிடமிருந்து பரிசுச்சீட்டை பறித்துக்கொண்ட கும்பல், இரவு 11.30 மணியளவில் அவரை வேறோர் இடத்தில் இறக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சாதிக் அளித்த விவரங்களின்படி, சந்தேகப் பேர்வழிகளில் ஒருவரான சுகைப் என்பவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
கும்பலைச் சேர்ந்த மற்றவர்களை அடையாளம் கண்டு, கைதுசெய்ய முயன்றுவருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

