புவனேஸ்வர்: ஒடிசாவில் காவல்துறை நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3.51 கோடி ரூபாய் ரொக்கத்தையும் ஆயுதங்களையும் காவல்துறை பறிமுதல் செய்தது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொள்ளைச் சம்பவம் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், ஒடிசாவில் காளஹண்டி மாவட்டத்தில் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
இதில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. எந்தெந்த இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டினர் மற்றும் வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.


