குருகிராம்: பசுவைக் கடத்த வந்தவர் என நினைத்து, 12ஆம் வகுப்பு மாணவரை விரட்டிச் சென்று, சுட்டுக்கொன்ற பசுப் பாதுகாவலர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு இந்தியாவின் ஹரியானா மாநிலம், பல்வல் மாவட்டத்தில் நிகழ்ந்தது.
ஆர்யன் மிஸ்ரா, 20, என்ற அம்மாணவர், ஃபரிதாபாத்தில் உணவருந்திவிட்டு, தாம் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டாருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அவர்கள் சென்ற தேசிய நெடுஞ்சாலை வழியே பசுவைக் கடத்திச் செல்வதாக அனில் கௌஷிக் தலைமையிலான பசுப் பாதுகாப்புக் குழுவிற்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, ஆர்யன் சென்ற காரை அனில் தரப்பு பின்தொடர்ந்தது.
ஆர்யன் சென்ற காரில் ஷங்கி என்பவரும் இருந்தார். அவர்மீது குற்ற வழக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல்துறையினர்தான் சாதாரண உடையில் தம்மைப் பின்தொடர்வதாக நினைத்த ஷங்கி, தன் தம்பி ஹர்ஷித்திடம் காரை வேகமாக ஓட்டச் சொன்னார்.
இதனால், பசுக் கள்வர்கள் தப்பிக்க முயல்வதாக நினைத்த அனில் தரப்பு, அவர்களை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டது. காரின் முன்னிருக்கையில் இருந்த ஆர்யன்மீது குண்டுபாய்ந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹர்ஷித் காரை நிறுத்தினார். பின்னர் காரிலிருந்து இறங்கிய அனில் தரப்பு, அருகிலிருந்து ஆர்யனை மீண்டும் சுட்டது.
“ஆர்யன் தலையிலும் கழுத்திலும் குண்டு பாய்ந்து காயமுற்றார். காரின் பின்னால் பெண்கள் அமர்ந்திருந்ததைக் கண்ட பிறகே தாங்கள் தவறிழைத்துவிட்டதை உணர்ந்த அனில் தரப்பு, அங்கிருந்து தப்பியது,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்யன், மறுநாள் 24ஆம் தேதி பிற்பகலில் உயிரிழந்துவிட்டார்.
கைதுசெய்யப்பட்ட ஐவரும் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.