தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைப்பேசி களவாணிகளுக்கு மாதச் சம்பளம், இலவசச் சாப்பாடு

1 mins read
5ec570e8-41ea-47b4-969c-434b3120839a
கைது செய்யப்பட்ட கைப்பேசித் திருடர்களும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கைப்பேசிகளும். - படம்: இந்திய ஊடகம்

லக்னோ: கைப்பேசித் திருட்டுக் கும்பல் ஒன்றை உத்தரப் பிரதேச மாநில ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைப்பேசிகளைத் திருடுவதற்காக அவர்களுக்கு நிரந்தர சம்பளம், வெளியூரில் திருடச் செல்லும்போது சாப்பாடு, தங்குமிடச் செலவு போன்றவற்றை அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) இரவு கோரக்பூர் ரயில்நிலையம் அருகே கைது செய்யப்பட்ட கும்பலில் 15 வயதுச் சிறுவனும் உள்ளார்.

அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 44 ஆண்ட்ராய்ட் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருட்டில் ஈடுபட தமது கும்பலைச் சேர்ந்த இருவருக்கு தலா 15,000 ரூபாய் மாதச் சம்பளம் அளிப்பதாக கும்பலின் தலைவன் மனோஜ் மண்டல், 35, கூறியதாக கோரக்பூர் வட்டாரக் காவல்துறை கண்காணிப்பாளர் குமார் மீனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வெளியூரில் திருடச் செல்லும்போது இலவசச் சாப்பாடும் விடுதியில் தங்குவதற்கான கட்டணமும் அவ்விருவருக்கும் தரப்பட்டதாக மனோஜ் சொன்னார்.

கூட்டம் மிகுந்த சந்தைகளிலும் ரயில் நிலையங்களிலும் கும்பலால் திருடப்படும் கைப்பேசிகள் பங்ளாதேஷுக்கும் நேப்பாளத்துக்கும் கடத்தப்படுவதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

கைப்பேசித் திருடர்களைக் கைது செய்ய ஒரு வாரமாக காவல்துறையினர் நோட்டமிட்டு வந்ததாகவும் ஏறத்தாழ 200 சிசிடிவி கண்காணிப்புக் கருவி படங்களின் உதவியுடன் கும்பலைச் சுற்றி வளைத்ததாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்