கங்கை விரைவுச் சாலை: ஏப்ரல் 29ல் மோடி திறந்து வைக்கிறார்

ரூ.37,000 கோடியில் புதிய சாலை

கங்கை விரைவுச் சாலை: ஏப்ரல் 29ல் மோடி திறந்து வைக்கிறார்

1 mins read
30bbef33-9443-440f-8580-018d24e64078
ஏறக்குறைய 37,000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலை, மாநிலத்தின் போக்குவரத்திலும் பொருளியல் வளர்ச்சியிலும் முக்கிய மைல்கல்லாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: தினத்தந்தி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிக நீளமான உட்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான ‘கங்கை விரைவுச் சாலை’யைப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஏப்ரல் 29) அதிகாரபூர்வமாகத் திறந்துவைக்கிறார்.

ஏறக்குறைய 37,000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலை, மாநிலத்தின் போக்குவரத்திலும் பொருளியல் வளர்ச்சியிலும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

மீரட், பிரயாக்ராஜ் நகரங்களை இணைக்கும் வகையில் 594 கிலோமீட்டர் நீளத்தில் இந்த ஆறு வழிச்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.

இது மீரட், ஹாபூர், புலந்த்ஷஹர், அம்ரோஹா, ஷாஜகான்பூர், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.

2021ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தப் பணிகள், நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விரைவுச் சாலையின் முக்கிய அம்சமாக, ஷாஜகான்பூர் பகுதியில் அவசரக் காலங்களில் விமானங்கள் தரையிறங்குவதற்காக 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள பிரத்யேக ஓடுபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மேற்கு, தெற்குப் பகுதிகளை நேரடியாக இணைக்கும் இந்தச் சாலையினால் பயண நேரம் வெகுவாகக் குறையும். அத்துடன், தொழிற்சாலைகளுக்கு இடையிலான போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு, புதிய முதலீட்டு வாய்ப்புகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாபெரும் விரைவுச் சாலையை வரும் 29ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அரசு அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்