திருப்பூர்: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வடமாநில வர்த்தகர்களின் கோரிக்கைகளை அடுத்து, திருப்பூரில் ஆயத்த ஆடை, உள்ளாடை உற்பத்தி வேகமெடுத்துள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை முதல் டெல்லி வரை இயங்கும் முன்னணி உள்நாட்டு ஆடைச் சந்தைகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளும் இடம்பெறுகின்றன.
ஆண்டு முழுவதும் வெளிமாநில வர்த்தகர்கள் தொடர்ச்சியாக வாங்கும் பின்னலாடைகள், உள்ளாடைகளைக் கொள்முதல் செய்து விற்கின்றனர்.
பின்னல் துணியில் ஆண்கள், பெண்கள், சிறார், குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள் புதிய வடிவங்களில் ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படுகின்றன.
இருப்பினும், திருப்பூரைப் பொறுத்தவரை தீபாவளி ஆர்டர்கள் மிக முக்கியம்.
ஆண்டு முழுவதும் இடம்பெறும் ரூ.30,000 கோடி வர்த்தகத்தில் ரூ.12,000 கோடி வரையிலான வர்த்தகம் தீபாவளிக் கால தருவிப்பு ஆணைகளாக இருக்கின்றன.
வரும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக தற்போது நவராத்திரி விழாவும் நடக்கிறது.
சில மாநிலங்களில் நவராத்திரி விழாவுக்குப் புத்தாடை அணியும் பாரம்பரியமும் நடப்பில் உள்ளது. ஆடைக் கொள்முதல் ஆண்டு முழுவதும் நடந்தாலும், உள்ளாடைக் கொள்முதல் தீபாவளியைச் சார்ந்தே மொத்தமாக நடக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்தி நூலிழை பின்னல் பனியன், ‘பாக்கெட்’ வைத்த அரைக்கால் சட்டை போன்றவற்றுக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம்.
அதேபோல், குளிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு செயற்கை நூலிழையில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக் கால தருவிப்பு ஆணைகள் கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் அதிகமாக இருந்து வருவதாக ஆடை உற்பத்தியாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
குறைந்த மதிப்புள்ள ஆர்டராக இருந்தாலும் வாங்கப்பட்ட ஆடைகள் வேகமாக உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.