புதுடெல்லி: நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயுக் கலன் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயுக் கலன் விலை 81 விழுக்காடு உயர்ந்திருப்பதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விலைவாசி உயரும் என்று ஏற்கெனவே தாம் கூறியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது வணிக சமையல் எரிவாயு விலை ஒரு கலனுக்கு ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் கணிசமாக விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுதான் தேர்தல் கட்டணம்.
“கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை 3 மாதங்களில் மட்டும் வணிக எல்பிஜி விலை ரூ.1,380 விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது 81 விழுக்காடு வரை விலை உயர்ந்திருக்கிறது,” என்று திரு ராகுல் காந்தி சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த விலை உயர்வால் தேநீர்க்கடை, உணவகங்கள், இனிப்புக் கடைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக வீடுகளுக்கான சமையல் எரிவாயுக் கலன், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் உயர்த்தப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஸ்டாலின் கண்டனம்
இதற்கிடையே, எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை இந்திய அரசு உணர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், முன்பே கணித்தது போல், தேர்தல் முடிந்தவுடன் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

