பாட்னா: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டே லால் மகதோ எரிவாயுத் தோம்பு விநியோகம் செய்யும் ஒரு ஊழியர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக, மக்களின் பிரதிநிதியாக வேண்டும் என்ற தனது கனவை விடாப்பிடியாகத் துரத்தி வருகிறார்.
எம்.பி., எம்எல்ஏ, உள்ளாட்சித் தேர்தல் என எந்தத் தேர்தலையும் விட்டுவைக்காமல் தொடர்ந்து போட்டியிட்டு வரும் மகதோ, தற்போது நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் களம் காண்கிறார்.
“சாமானிய தலைவரை உருவாக்க மக்கள் விரும்புகிறார்கள்”
தனது அரசியல் பயணம் குறித்து பேசிய சோட்டே லால் மகதோ, “நான் ஒரு சிறிய வீட்டில்தான் வாழ்கிறேன். 2004ஆம் ஆண்டு முதல் நகராட்சித் தேர்தல் உட்பட அனைத்துத் தேர்தல்களிலும் நான் மனம் தளராமல் போட்டியிட்டு வருகிறேன்.
“முன்னாள் மத்திய அமைச்சர் சையத் ஷாநவாஸ் உசேன் போன்ற அனுபவமிக்க அரசியல்வாதிகளை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளேன். ஆனால், இதுவரை என்னால் வெற்றிபெற முடியவில்லை,” என்று கூறினார்.
மேலும் அவர், “ஒரு ஊழியரான எனக்கு மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. நான் தேர்தலில் போட்டியிட அவர்கள்தான் நன்கொடை அளிக்கின்றனர்.
“என்னைப்போன்ற ஒரு சாமானியத் தலைவரை உருவாக்கிடவே மக்கள் விரும்புகிறார்கள். இந்த முறை நான் நிச்சயம் வெற்றிபெறுவேன்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஆடு, கோழி விற்று நிதி திரட்டும் மனைவி
மகதோவின் மனைவி, தனது கணவரின் பிரசாரத்துக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக ஆடு, கோழி, முட்டைகளை விற்பனை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“பிரச்சினைகள் ஏற்படும்போது எனது கணவர் சோட்டே லால் மகதோ எப்போதும் மக்களுடனே இருப்பார். வாக்காளர்கள் இந்த முறை அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள்,” என்று மகதோவின் மனைவி உறுதியாகக் கூறுகிறார்.