தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உண்மை வேறு: மௌனம் கலைத்த அதானி

2 mins read
7222a188-f8cc-4ac6-9bd8-dba633f13b84
இன்றைய உலகில் உண்மையைவிட எதிர்மறைக் கருத்துகள்தான் வேகமாகப் பரவுகின்றன என்று கௌதம் அதானி தெரிவித்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அமெரிக்காவின் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் தொடர்பில் தொழிலதிபர் கௌதம் அதானி முதல்முறை கருத்துத் தெரிவித்து உள்ளார்.

இதுபோன்ற சவால்களைத் தமது குழுமம் சந்திப்பது இது முதல்முறை அல்ல என்று அவர் தெரிவித்து உள்ளார்.

துறைமுகம் முதல் மின் உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டு உள்ள அதானி குழுமம், இந்தியாவில் பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள சூரியசக்தி மின்சாரக் குத்தகைகளைப் பெற இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு US$265 மில்லியன் (S$355 மில்லியன்) லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித் துறைக் குற்றம் சாட்டி உள்ளது.

ஈராண்டுகளில் அதானிக்கு எதிராக எழுந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய குற்றச்சாட்டு அது.

லஞ்சக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து. அதானி குழும மின் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக இந்திய மாநிலம் ஒன்று தெரிவித்து உள்ளது.

“அதானி குழுமத்தின் நன்கொடை எங்களது மாநில மக்களுக்குத் தேவையில்லை,” எனக் கூறி ரூ.100 கோடி நன்கொடையை தெலுங்கானா முதல்வர் உதறித் தள்ளினார்.

அதேவேளை, பிரான்சின் ‘டோட்டல் எனர்ஜிஸ்’ நிறுவனம் அதானி குழுமத்திற்கான முதலீடுகளை நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்து உள்ளது.

அரசியல் ரீதியாகவும் கொந்தளிப்பு நிலவுகிறது. அமெரிக்காவின் கைதாணையைப் பின்பற்றி அதானியைக் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் அதானி பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கிளப்பியதால் பெரும் அமளி ஏற்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டன.

அதானிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும், தங்கள் நிறுவனங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை (நவம்பர் 30) மாலை ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கௌதம் அதானி பேசினார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் பற்றி முதல்முறை பேசிய அவர், “அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவில் எழுந்த குற்றச்சாட்டுகளை உங்களில் பலரும் அறிந்து இருப்பீர்கள்.

“இதுபோன்ற சவால்களை நாங்கள் சந்திப்பது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு தாக்குதலும் எங்களை மேலும் வலுவாக்குகிறது. இத்தகைய தாக்குதல்கள் அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கான படிக்கற்கள்தான்.

“இன்றைய உலகில் உண்மையைவிட எதிர்மறைக் கருத்துகள்தான் வேகமாகப் பரவுகின்றன.

“சட்ட நடைமுறைகளுக்கு இணங்க நாங்கள் செயல்படுவதால், உலகத்தர விதிமுறைகளுக்கான எங்களது ஒட்டுமொத்த கடப்பாட்டை நான் மறுபடியும் உறுதிசெய்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்