சுய பாலின பிரகடனம்: நீடிக்கும் திருநங்கையரின் சட்டப் போராட்டம்

சுய பாலின பிரகடனம்: நீடிக்கும் திருநங்கையரின் சட்டப் போராட்டம்

படம்: ஏஎஃப்பி

23 Sep 2026 - 5:49 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் 2026ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்கள், திருநங்கைகளின் உரிமையியல் நடைமுறைகளிலும் மருத்துவச் சிகிச்சைகளிலும் பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, மருத்துவமனைகளும் தனியார் மருந்தகங்களும் ஹார்மோன் (சுரப்பி) மாற்று சிகிச்சைகள், பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சைகளை வழங்குவதில் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டாயப் பாலின மாற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள கடுமையான தண்டனைப் பிரிவுகள், நியாயமான மருத்துவச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் பல சிகிச்சை மையங்கள் மருந்து வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

சுரண்டல், கட்டாய அடையாள மாற்றம், ஆள்கடத்தல் ஆகியவற்றுக்கான தண்டனைகளை வலுப்படுத்துவதன் மூலம், நலிவடைந்த குழுக்களைச் சிறப்பாகப் பாதுகாப்பதே இந்த மாற்றங்களின் நோக்கம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், ஹைதராபாத்தைச் சேர்ந்த, 23 வயதான திருநங்கை காளி சித்தார்த் மேடபள்ளி, இந்தியாவில் ஹார்மோன் மாற்று சிகிச்சையைத் தொடங்கியபோது, ​​ஓராண்டுக்குள் தனது மருத்துவ மாற்றத்தை நிறைவுசெய்து அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று தாம் எதிர்பார்த்ததாகக் கூறுகிறார்.

ஆனால், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் சிகிச்சையைத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, இந்திய நாடாளுமன்றம் திருநங்கைகளுக்கான சட்டத்தைத் திருத்தியமைத்தது. மேலும், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அவருக்கான மருந்துகளை நிறுத்தியது.

இதன் காரணமாக, ‘எல்லாம் முடங்கிவிட்டது’ என்று தகவல் தொடர்பு நிபுணரும் LGBTQ உரிமை ஆர்வலருமான அவர், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இவரைப் போல் பல திருநங்கைகள் ஹார்மோன் சிகிச்சையைத் தொடர முடியாமல் சுய மருத்துவம் அல்லது பாதுகாப்பற்ற வழிமுறைகளை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மேற்குறிப்பிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய 2019ஆம் ஆண்டு சட்டத்தில், ஒருவர் தன்னைத் திருநங்கையாகச் சுய பிரகடனம் செய்துகொள்ளும் உரிமை (Self-identification) வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 2026 சட்டத் திருத்தம் இம்முறையை மாற்றி, மருத்துவக் குழுவின் பரிசீலனை, பரிந்துரையைக் கட்டாயமாக்கியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்குவதற்கு முன் இக்குழுவின் சான்றளிப்பு தேவைப்படுவதால், அரசுப் பதிவேடுகள், அடையாள அட்டைகளைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதை திருநங்கைகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு வழக்கில் தீர்ப்பளித்த இந்திய உச்ச நீதிமன்றம், சுய பாலின அடையாளத்தை அடிப்படை உரிமையாகக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், புதிய திருத்தங்கள் இத்தீர்ப்புக்கு எதிராக அமைந்துள்ளதாக திருநங்கை செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திருநங்கைசிகிச்சைஅறுவை சிகிச்சைமருத்துவம்உரிமைசட்டம்பாதுகாப்பு