புவியியலா வரலாறா?: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தலைமைத் தளபதி கடும் எச்சரிக்கை

புவியியலா வரலாறா?: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தலைமைத் தளபதி கடும் எச்சரிக்கை

1 mins read
aaf48061-56f8-463a-90b3-e4b5221eedfc
தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி. - கோப்புப் படம்: தி எக்கானமிக் டைம்ஸ்

புதுடெல்லி: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் செயல்பாடுகளை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் செயல்பாடுகளை ஒருபோதும் ஏற்க இயலாது என்று அவர் புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது குறிப்பிட்டார்.

“இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் தொடர்ந்தால், அந்நாடு ஒரு கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

“புவியியலின் ஒரு பகுதியாக இருக்க பாகிஸ்தான் விரும்புகிறதா அல்லது வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்க அந்நாடு விரும்புகிறதா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டியிருக்கும்,” என்றார் தளபதி உபேந்திர திவேதி.

கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்தியா கோபமடையும் வகையில் ஏதேனும் பயங்கரவாதச் செயல்கள் நிகழ்ந்தால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதுடெல்லி நிகழ்ச்சியில் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்தியா இதுபோன்ற எச்சரிக்கையை விடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைய முற்பட்டால் பாகிஸ்தான் அதன் வரலாற்றையும் புவியியலையும் மாற்றி அமைக்கக்கூடிய கடுமையான பதிலடியை இந்தியா அளிக்கும் எனக் கூறியிருந்தார்.

தற்காப்பு அமைச்சரின் எச்சரிக்கையை மறு உறுதி செய்யும் வகையில், அதை எதிரொலித்துள்ளார் ராணுவத் தலைமைத் தளபதி.

குறிப்புச் சொற்கள்