திருமணத்தை மீறிய உறவு: கணவனைக் கொன்று புதைத்து, அதன்மீது கழிவறைத் தொட்டி கட்டினார்

திருமணத்தை மீறிய உறவு: கணவனைக் கொன்று புதைத்து, அதன்மீது கழிவறைத் தொட்டி கட்டினார்

2 mins read
524e0d86-53a2-4c06-b4ac-cf0656574ddb
நீதுவும் அவருடைய காதலர் ஹர்பாலும் கைது செய்யப்பட்டனர். படங்கள்: இந்திய ஊடகம் -

காதலனுடன் இணைந்து கணவனைக் கொன்று கழிவறைத் தொட்டிக்குள் புதைத்த மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சதீஷ் பால். இவருக்கு திருமணமாகி நீத்து என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சதீஷைக் காணவில்லை என சதீஷின் சகோதரர் சோட்டலால், காசியாபாத் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரிக்கத் தொடங்கியது. அப்போது, ஒருவாரமாக கணவனைக் காணாவிட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல் இருந்த நீத்து மீது காவல்துறைக்குச் சந்தேகம் வலுத்தது.

ஆனால், நீத்துவை விசாரித்தபோது அவர் எந்தக் குற்றத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. நீத்துவுக்கும் ஹர்பால் என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்தது தெரியவந்தது. அது தொடர்பாக காவல்துறை ஹர்பாலை விசாரித்ததில், சதீஷைக் கூட்டாகக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

"சதீஷுக்கும் நீதுவுக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக ஹர்பால் நீத்துவோடு நெருக்கமானார். கணவரால் அதிகத் தொல்லை ஏற்படுவதாகக் கருதிய நீத்து, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

"அதற்கு ஹர்பாலை உதவிக்கு அழைத்தார். கொலை நடந்த தினம், சதீஷ் வழக்கம்போல வீட்டில் குடித்துவிட்டு மதுபோதையில் இருந்தபோது ஹர்பாலும் நீத்துவும் அவரின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்தனர்.

"அவர்களின் வீட்டுக்குப் பின்னால் கட்டப்பட்டு வந்த கழிவறைத் தொட்டிக்குள், கௌரவ் எனும் கட்டடத் தொழிலாளர் உதவியுடன் சதீஷின் உடலைப் புதைத்து அதன் மேலேயே, அத்தொட்டியைக் கட்டி எழுப்பினர். குற்றத்தை உறுதிப்படுத்த, உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது," என காவல்துறைத் தரப்பு தெரிவித்தது.

நீத்துவும் ஹர்பாலும் கைது செய்யப்பட்டனர்.