மும்பை: மும்பை விமான நிலையத்தில் ‘கிப்பன்’ எனப்படும் சிறிய வகை மனிதக் குரங்குகளைக் கடத்திய ஆடவர் பிடிபட்டார்.
மலேசியாவில் இருந்து தாய்லாந்து வழியாக கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) மும்பை வந்திறங்கிய அந்த ஆடவர் மீது சந்தேகம் அடைந்த சுங்கத் துறை அதிகாரிகள் அவரது பயணப் பெட்டியைச் சோதித்தனர்.
அப்போது அந்தப் பெட்டியில் கிப்பன் வகைக் குரங்குகள் இரண்டு இருந்தன. அவற்றில் ஒன்று ஏற்கெனவே இறந்துவிட்டது. அது இந்தோனீசியாவைச் சேர்ந்த குட்டிக் குரங்கு.
கூடைக்குள் அடைக்கப்பட்டு இருந்த மற்றொரு குரங்கு உயிருடன் இருப்பதை சுங்கத் துறை அதிகாரிகள் வெளியிட்ட காணொளி காட்டியது.
அரிய வகை வனவிலங்குகளைக் கடத்தும் கும்பல் இந்தியாவுக்கு அதுபோன்ற விலங்குகளைக் கடத்துவதாக அதிகாரிகள் கூறினர்.
அரிதான வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கடத்தப்படுவதைக் கண்டுபிடிக்க ‘டிராஃபிக்’ என்னும் உலகளாவிய அமைப்பு செயல்படுகிறது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் தாய்லாந்து-இந்தியா விமானங்களில் இறந்த நிலையிலும் உயிருடனும் 7,000க்கும் மேற்பட்ட விலங்குகள் கடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மே மாதம் நடந்த ஒரு சம்பவத்தில், மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு நபர்களிடம் இருந்து ஏழு இறந்த கிப்பன் குரங்குகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டிராஃபிக் அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
“அந்த இருவரும் மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு ஒன்பது குரங்குகளை தங்கள் பயணப் பெட்டிகளில் மறைத்து எடுத்து வந்துள்ளனர்,” என்று அறிக்கை மேலும் கூறியது.
சிறிய மனிதக் குரங்குகளான கிப்பன்கள் இந்தியா, இந்தோனீசியா ஆகியன உள்ளிட்ட 11 நாடுகளில் காணப்படுகின்றன.

