சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மூன்று வயதுச் சிறுமி மாண்டுவிட்டார்.
அதன் தொடர்பில், பீகார் மாநில ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறுமியின் குடும்பத்தாரும் பீகாரைச் சேர்ந்தவர்களே. அவர்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் வசித்து வருகின்றனர்.
சிறுமி, கடுங்காயங்களுடன் புதர்ப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) வீசப்பட்டிருந்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றித் திங்கட்கிழமை மரணமடைந்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரைச் சிறுமிக்குத் தெரியும் என்று காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், என்டிடிவி ஊடகத்திடம் தெரிவித்தார். சிறுமியிடம் ரொட்டியைக் கொடுத்து, ஆசைகாட்டி வெளியே அழைத்துச்சென்ற ஆடவர், பின்னர் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் சொன்னார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை உள்ளூர்வாசிகள் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்பட்டது. இதில் வேறு எவரும் ஈடுபடவில்லை என்றும் ஒரே ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் அதிகாரி தெரிவித்தார். பிடிபட்டவர், பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி என்ற 19 வயது இளையர் எனத் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, ‘குழந்தையைப் புலம்பெயர்ந்துவந்த ஊழியர்கள் நால்வர் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஆகவே, இச்சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று பேரைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று வடமாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர்களிடம் காவல்துறையினர் உறுதியளித்தனர். பின்னர், ஏறக்குறைய 2 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராகப் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன. அண்மையில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போதும் இந்த விவகாரம் முக்கிய இடம் பிடித்தது. பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளன.

