கர்னூல்: ஆந்திராவில் அரிய வகைத் தசைநார்ச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சைக்காக ரூ.6 கோடி மதிப்பிலான ஊசி மருந்தினை ஆந்திர மாநிலக் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் நேரில் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் பெல்துர்த்தியைச் சேர்ந்த சுரேஷ் - புஷ்பலதா தம்பதிக்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெண் குழந்தை பிறந்தது.
புனர்விகா எனப் பெயரிடப்பட்ட அந்தச் சிறுமிக்கு, பிறந்தது முதலே ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி’ (SMA) எனும் தசை நாரைப் பாதிக்கும் அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நோயைக் குணப்படுத்த வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்படும் ஓர் ஊசியின் விலை ரூ.16 கோடி என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியால் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட இயலாத நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாக நிதியுதவி கோரினர்.
கடந்த ஓராண்டாகப் பல்வேறு தரப்பினரின் உதவியால் ரூ.10 கோடி வரை மட்டுமே வசூலானது.
அமைச்சரின் அதிரடி உதவி
மீதமுள்ள ரூ.6 கோடியைத் திரட்டமுடியாமல் தவித்த பெற்றோரின் நிலை குறித்து அறிந்த அமைச்சர் நாரா லோகேஷ், அந்தத் தொகையைத் தாமே தனிப்பட்ட முறையில் வழங்குவதாக உறுதி அளித்தார்.
அதன்படி, ஹைதராபாத்தில் சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்ற அமைச்சர், வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான அந்த ஊசி மருந்தினை வழங்கினார். மருத்துவர்கள் முன்னிலையில் அந்த மருந்து சிறுமியின் உடலில் செலுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த உதவியால் நெகிழ்ந்துபோன சிறுமியின் பெற்றோர், அமைச்சருக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
இது தொடர்பாகத் தமது ‘எக்ஸ்’ (டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் லோகேஷ், “குழந்தை புனர்விகா விரைவில் முழுவதும் குணமடைந்து, ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த மனிதாபிமான செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

