ஜெய்ப்பூர்: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயதுச் சிறுமி பத்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமையன்று (ஜனவரி 1) மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், கோட்புத்லி மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சேத்னா என்ற அச்சிறுமி மீட்கப்பட்டதும் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவமனை அதிகாரிகள், அவள் இறந்துவிட்டதை உறுதிசெய்தனர்.
கீரத்புரா எனும் சிற்றூரைச் சேர்ந்த சேத்னா கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தங்களது வேளாண் நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த 150 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள். பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவளது அழுகுரல் கேட்கவே, தங்கள் பிள்ளை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக்கொண்டதை அவளின் குடும்பத்தினர் அறிந்தனர்.
தகவலறிந்து தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மருத்துவக் குழுவினரும் அங்கு விரைந்தனர்.
தொடக்கத்தில் சேத்னாவை மீட்கும் முயற்சி தோல்வியில் முடியவே, குழாய் வழியாக உயிர்வாயு அனுப்பப்பட்டு வந்தது. பின்னர், மீட்புப் படையினர் அந்த ஆழ்துளைக்கு அருகில் சுரங்கம் தோண்டினர். ஆனால், அது வேறு திசைக்கு இட்டுச்சென்றது.
கடைசி சில மணி நேரம் சேத்னாவிற்கு உணவோ உயிர்வாயுவோ அளிக்கப்படாததால் அவளது நிலைமை மோசமானது. இருப்பினும், மீட்புப் படையினர் ஒருவழியாக அவளை மீட்டனர்.

