வடமேற்கு டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 16 வயது சிறுமி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஷாபாத் டெய்ரி என்னும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை அச்சிறுமி பலமுறை கத்தியால் குத்தப்பட்டும் கல்லால் தாக்கியும் கொல்லப்பட்டதைத் தடுக்க யாரும் முன்வரவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் சாஹில், 20, என்பவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்ட சிறுமியின் காதலர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
சிறுமியை 22 முறை கத்தியால் அந்த இளையர் குத்துவது அப்பகுதியில் இருந்த கண்காணிப்புப் படக்கருவியில் (சிசிடிவி) பதிவாகி உள்ளது. அதன் பின்னர் சிறுமியின் தலையில் பெரிய கான்கிரீட் கல்லால் அவர் தாக்குவதும் தெரிந்தது.
அதன் பின்னர் வீதியில் சிறுமி சடலமாக விழுந்து கிடந்தார். தமது நண்பரின் மகன் பிறந்த நாளில் கலந்துகொள்ள சிறுமி சென்றபோது அவரை வழிமறித்து சாஹில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளையர் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
அவரை காவல்துறையினர் விசாரணையில் எடுத்து விசாரிக்கும்போது இன்னும் பல தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொலைக்கான காரணம் என்ன என்பதும் அப்போது தெரிய வரும்.
நடந்திருப்பது திட்டமிட்ட கொலை என்று காவல்துறை சந்தேகிக்கிறது. காரணம், உள்ளூர் சந்தையில் 15 நாள்களுக்கு முன்னரே சாஹில் கத்தி ஒன்றை வாங்கியது இப்போது தெரியவந்துள்ளது.
சிறுமியைத் தாக்கிவிட்டு இரண்டு பேருந்துகளில் மாறி மாறி பயணம் செய்து உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சஹர் பகுதிக்கு சாஹில் தப்பிச் சென்றுவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் தீவிர விசாரணையின் பலனாக ஒரேநாளில் அவர் கைது செய்யப்பட்டார். இருவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாகக் காவல்துறை கூறியது. ஆனால், அந்த ஆடவர் யாரென்றே தெரியாது என சிறுமியின் தாயார் தெரிவித்தார்.
இந்தப் படுகொலையை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாகக் கண்டித்துள்ளார்.