கௌகாத்தி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் காவல்துறைப் பிடியிலிருந்து தப்பியோடியபோது குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) இந்தியாவின் அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர், மூவர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்நிலையில், அவ்வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தஃபசுல் இஸ்லாம் என்ற ஆடவரைக் காவல்துறையினர் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, காவலரின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு தப்பியோடிய தஃபசுல், அருகிலிருந்த குளத்தில் குதித்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரின் துணையுடன் காவல்துறை அவரைத் தேடியது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
“கையில் விலங்கிடப்பட்ட நிலையில் தஃபசுலைக் காவலர் பிடித்திருந்தபோது அவரால் எப்படித் தப்ப முடிந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,” என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறினார்.
மாலை நேரப் பயிற்சி வகுப்பிற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பியபோது அப்பெண்ணை அக்கும்பல் சீரழித்தது.
அங்கிருந்த குளத்திற்கு அருகே அச்சிறுமி அரை மயக்கநிலையில் காணப்பட்டதாகவும் அருகிலேயே அவரது மிதிவண்டி விழுந்து கிடந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அச்சிறுமி உடல்நிலை தேறிவருகிறார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது மருத்துவச் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர்.
அவருக்கு நேர்ந்த கொடுமை தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வ சர்மா, “இது மனிதநேயத்திற்கு எதிராக நிகழ்ந்த கொடுமை. திங் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமையில் தொடர்புடையவர்கள் உறுதியாகத் தண்டிக்கப்படுவர். சம்பவ இடத்திற்குச் செல்லுமாறும் அத்தகைய கொடூரர்கள்மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்யுமாறும் அசாம் காவல்துறைத் தலைவர்க்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்றார்.

