தெருநாய்களிடமிருந்து தப்பிக்க முயன்ற சிறுமி, கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு

தெருநாய்களிடமிருந்து தப்பிக்க முயன்ற சிறுமி, கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு

1 mins read
b7ed6cdc-ba6f-4528-b0b8-5ce9ba661d20
டெல்லியில் ஆளரவமற்ற சாலைப் பகுதியில் காணப்படும் தெருநாய்கள். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ராய்ப்பூர்: தெருநாய்களிடமிருந்து தப்பிக்க முயன்ற எட்டு வயதுச் சிறுமி, அருகிலிருந்து கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாள்.

இச்சம்பவம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூர் மாவட்டத்திலுள்ள சத்பட்டா எனும் சிற்றூரில் நிகழ்ந்தது.

ஜீனத் கானம் என்ற அச்சிறுமி, கடந்த வியாழக்கிழமை மாலை துணைப்பாட வகுப்பு முடிந்தபின் தன் பத்து வயது அக்காளுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.

அப்போது, வழியிலிருந்த தெருநாய்கள் தங்களைப் பார்த்துக் குரைத்ததால், சகோதரிகள் இருவரும் மிரண்டுபோயினர்.

அதனால், அவர்கள் இருவரும் அங்கிருந்து அஞ்சி ஓடினர். மூத்தவள் ஒரு வளைவில் திரும்பி வாகனங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டாள். ஆனால், ஜீனத்தோ கால்தவறி ஓரத்திலிருந்த பாழுங்கிணற்றுக்குள் விழுந்தாள்.

அதனைக் கண்டதும் மூத்தவள் ஓடிச் சென்று தன் குடும்பத்தினரிடம் நடந்ததைக் கூறினாள். உடனே காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால், சேறும் சகதியும் மிகுந்திருந்ததால் தேடுதல் பணி சவாலாக இருந்தது.

ஆயினும், விடாது போராடிய அவர்கள், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு ஜீனத்தின் உடலை மீட்டனர்.

இவ்வேளையில், துபாய் விமானத்தைப் பிடிக்க ஜீனத்தின் தந்தை டெல்லி சென்றிருந்தார். தகவல் தெரிந்ததும் அவர் பயணத்தை ரத்துசெய்துவிட்டு, ஊர் திரும்பினார்.

இதனிடையே, ஜீனத்தைப் பலிகொண்ட கிணறு குறித்து அப்பகுதிவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்