தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுமி மரணம்: அமைப்புகளின் நடவடிக்கைகளில் குறைபாடு, அமைச்சர் மசகோஸ் மன்னிப்பு கோரினார்

3 mins read
1d2605cd-4320-45d7-9908-0183aac43982
தாயும் அவரது அப்போதைய காதலரும் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் கொடுமைப்படுத்தியதை அடுத்து 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி, சிறுமி மேகன் குங் மாண்டார். - படங்கள்: CCXXCXCX/இன்ஸ்டகிராம், ஷின் மின் டெய்லி வாசகர், இன்ஸ்டகிராம்

நான்கு வயதுச் சிறுமி மேகன் குங் தன் தாயாராலும் அவரது காதலராலும் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவத்தை அமைப்புகள் கையாண்ட விதத்தில் பல குறைபாடுகள் இருப்பதாகத் தன்னிச்சையான மறுஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

குழந்தைப் பாதுகாப்புச் சேவை அதிகாரி அச்சிறுமியின் பாலர் பள்ளி உதவி கோரி செய்த தொலைபேசி அழைப்புகளைப் பதிவு செய்யத் தவறியதும் காவல்துறை அதிகாரிகள் செயல்முறைகளைச் சரிவரப் பின்பற்றாததும் அவற்றில் அடங்கும்.

2020ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி சிறுமி மேகன் உயிரிழந்தார். மேகனின் தாயாரும் அவரது அப்போதைய காதலரும் சிறுமியைக் கிட்டத்தட்ட ஓராண்டாகக் கொடுமைப்படுத்தினர்.

இத்தகைய சம்பவங்கள் இனியும் நிகழாமல் தடுக்கும் நோக்கில் மறுஆய்வுக் குழு ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. வியாழக்கிழமை (அக்டோபர் 23) அது வெளியிட்ட 42-பக்க அறிக்கையில் அவை இடம்பெற்றுள்ளன.

பிள்ளைகள் துன்புறுத்தப்படும் சம்பவங்களை எந்த அமைப்பு கையாள வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பதும் இத்தகைய விவகாரங்களைக் கையாள்வது தொடர்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அவற்றை மறுஆய்வு செய்ய மேல்முறையீட்டு நடைமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதும் பரிந்துரைகளில் அடங்கும்.

அறிக்கை பற்றிக் கருத்துரைத்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, “தேசியக் குழந்தைகள் பாதுகாப்புக் கட்டமைப்பின் தலைவர் என்ற முறையில், மறுஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்புகள் குறித்து வருத்தம் தெரிவிக்கிறேன். இந்த விவகாரத்தைக் கையாண்டபோது இன்னும் கூடுதலாகச் செய்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்,” என்று கூறினார்.

குழந்தைகள் உயிரிழக்கும் ஒவ்வோர் அபாயத்தையும் துடைத்தொழிக்க நம்மால் இயலாது. இருப்பினும் இத்தகைய துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நம்மால் ஆன அனைத்தையும் செய்வதில் உறுதியாக இருக்கிறோம் என்றார் அமைச்சர்.

சிறுமி மேகனின் விவகாரத்தில் தொடர்புடைய அமைப்புகள் அனைத்தும் மறுஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்புகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக குழந்தைப் பாதுகாப்புச் சேவையை மேற்பார்வையிடும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.

நடைமுறைகளைச் சரிவரப் பின்பற்றாத தனது அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

குழந்தைப் பாதுகாப்புச் சேவை அதிகாரி மீது ஒழுங்கு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு கூறியது.

முன்னதாக, சிறுமி பயின்ற பாலர் பள்ளியை நடத்தும் ‘பியாண்ட் சோஷியல் சர்விசஸ்’ எனும் சமூகச் சேவை அமைப்பு அந்த விவகாரத்தைக் குழந்தைப் பாதுகாப்புச் சேவையிடம் தெரிவிக்கவில்லை என்று கூறிய அமைச்சு, கடந்த ஏப்ரலில் இந்த விவகாரம் மறுஆய்வு செய்யப்படும் என்று அறிவித்தது.

அமைப்பு சமர்ப்பித்த அறிக்கையில் மேகனின் காயங்கள் எந்த அளவு கடுமையானவை என்று குறிப்பிடப்படவில்லை. பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம்தான் அவை தெரியவந்தன.

இதனால் சம்பந்தப்பட்ட அமைப்புகள் போதிய அளவில் இந்த விவகாரத்தில் தலையிட முடியாமல் போனது என்று அப்போது அமைச்சு கூறியிருந்தது.

அதனால் மே மாதம், பேராசிரியர் கென்னத் பூன் தலைமையில் தன்னிச்சையான மறுஆய்வுக் குழுவை நியமித்ததாக அமைச்சர் மசகோஸ் கூறினார்.

அமைப்புகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இன்னும் மேம்பட்ட முறையில் செயலாற்றியிருக்கக்கூடும் என்று மறுஆய்வுக் குழு தெரிவித்தது. அவற்றுக்கிடையில் சில சம்பவங்களில் தெளிவான புரிதலும் தகவல் தொடர்பும் இல்லை என்று அது கூறியது.

சிறுமி மேகனைக் காப்பாற்றியிருக்கக்கூடிய சில வாய்ப்புகள் தவறவிடப்பட்டதாக அது குறிப்பிட்டது.

அமைச்சு அதன் செயல்முறைகளை வலுப்படுத்தி, அமைப்புகளுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் என்று கூறிய திரு மசகோஸ், இந்த விவகாரத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மேம்பட்ட முறையில் செயலாற்றுவோம் என்றார்.

குறிப்புச் சொற்கள்