இஸ்லாமாபாத்: பஹல்ஹாம் தாக்குதலின் எதிரொலியாக ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது.
சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தினால், அதனைப் போராகவே கருதப்படும் என்றும் தங்களது முழு பலத்தையும் காட்டுவோம் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது.
தொடர்ந்து எல்லையில் ராணுவப் படைகளை பாகிஸ்தான் குவித்து வருகிறது. முப்படைகளும் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறுகையில், “பாகிஸ்தானில், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த உள்ளதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் தெரியவந்துள்ளது.
“பாகிஸ்தானியர்கள்மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது, தக்க பதிலடி கொடுப்போம். நாங்கள் தற்காப்புக்காகவே தயார்நிலையில் உள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.