‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்று கூறிய ஆசிரியை பணியிடமாற்றம்

1 mins read
f3c85a9c-28fe-491e-9f91-b7e5c852e00c
தன்மீதான குற்றச்சாட்டை ஆசிரியை மறுத்துள்ளார். - மாதிரிப்படம்

ஷிவமோகா: மாணவர்கள் இருவரைப் பாகிஸ்தானுக்குச் செல்லும்படி கூறிய ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்தியாவின் கர்நாடக மாநிலம், ஷிவமோகாவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலையில், மாநிலப் பள்ளிக் கல்வித்துறை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

திப்பு நகரிலுள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் மஞ்சுளா தேவி என்ற ஆசிரியை, ஐந்தாம் வகுப்பில் பயிலும் அவ்விரு மாணவர்களை நோக்கி இவ்வாறு சொன்னதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஷிவமோகா மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர் ஏ நஸுருல்லா அந்த ஆசிரியைமீது புகாரளித்தார்.

இதனைத் தொடர்ந்து, அந்த ஆசிரியை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். அவர்மீது துறைசார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்மீதான குற்றச்சாட்டை மஞ்சுளா தேவி மறுத்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மாணவர்களைக் கண்டித்ததாகவும் அவர்கள் தன்னை மதிக்காமல் நடந்துகொண்டதாகவும் ஆசிரியை மஞ்சுளா தேவி கூறியதாக ஷிவமோகா பொதுக் கல்வி உதவி இயக்குநர் பரமேஸ்வரப்பா தெரிவித்தார்.

ஆனால், “இந்தியா உங்கள் நாடன்று. நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்,” என்று அம்மாணவர்களிடம் மஞ்சுளா தேவி கூறியதாக நஸுருல்லா தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், ஆசிரியை அவ்வாறு கூறியது பற்றி அம்மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறினர். பின்னர் அப்பெற்றோர்கள் அதுபற்றி உள்ளூர்த் தலைவர்களிடம் தெரிவித்தனர்.

புகார் பதியப்பட்டதை அடுத்து, வட்டாரக் கல்வி அலுவலர் முதற்கட்ட விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்தார்.

குறிப்புச் சொற்கள்