புதுடெல்லி: இந்தியாவின் பிரபலமான சுற்றுலா மாநிலமான கோவா, ஆஸ்திரேலியாவைப் போலவே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் சிறுவர்களின் மனநலத்திற்கு ஏற்படும் அபாயங்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால், சிறுவர்களுக்கு அவற்றிலிருந்து தடை விதிக்க பரிசீலித்து வருகிறது.
மெட்டா, கூகலின் யூடியூப், எக்ஸ் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சிறந்த சந்தைகளில், இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட பல பயனர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சமூக ஊடகங்களில் தேசிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை அல்லது மத்திய அரசு திட்டமிட்டுள்ள பரிந்துரைகள் கூட இல்லை.
கோவா மாநில அதிகாரிகள், சிறார் சமூக ஊடகத் தளங்களை எவ்வாறு அணுகுவது என்பதை ஒழுங்குபடுத்துவது குறித்து ஆஸ்திரேலியாவின் சட்டத்தை ஆய்வு செய்து வருவதாக மாநிலத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரோஹன் கவுன்டே தெரிவித்தார்.
“முடிந்தால், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு இதேபோன்ற தடையை நாங்கள் அமல்படுத்துவோம்,” என்று அவர் இந்த வாரம் செய்தியாளர்களிடம் கூறினார்.
53 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தெற்கு மாநிலமான ஆந்திரப் பிரதேசம், இதேபோன்ற நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளது. இதற்கு நேர்மாறாக, கோவா, பரப்பளவில் மிகச்சிறிய மாநிலமாகும். இதன் மக்கள் தொகை 1.5 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சு இதன் தொடர்பில் கருத்து கூற ராய்ட்டர்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டது. அதற்கு அமைச்சு உடனடியாகப் பதிலளிக்கவில்லை. இந்தத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க ராய்ட்டர்ஸ் விடுத்த கோரிக்கைக்கு மெட்டா, கூகல், எக்ஸ் ஆகியவையும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
உலகளாவிய ஒழுங்குமுறை முயற்சிகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஆந்திரப் பிரதேசம், அண்மையில் மூத்த அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு, 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதித்த முதல் நாடாக ஆஸ்திரேலியா திகழ்ந்தது. அது தடை அமலான முதல் மாதத்தில் 4.7 மில்லியன் பதின்ம வயதினரின் சமூக ஊடகக் கணக்குகளைச் செயலிழக்கச் செய்தது.
தொடர்புடைய செய்திகள்
இதேபோன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தில், ஆஸ்திரேலியாவின் போக்கைக் கவனித்துக்கொண்டிருக்கும் பிற நாடுகளுடன் பிரான்ஸ், இந்தோனீசியா, மலேசியா ஆகியவையும் அடங்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.

