கோவா இரவு விடுதியில் தீ விபத்து; 25 பேர் உயிரிழப்பு

2 mins read
4453f0e0-e0ef-44b7-81d3-5f4a799d1238
விடுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கி இருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானோருக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. - படம்: அதிர்வு இணையத்தளம்

பானாஜி: கோவா மாநிலம் பாகா கடற்பகுதியில் இயங்கி வந்த இரவு விடுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 25 பேர் மாண்டு போயினர்.

இவர்களில் பலர் விடுதியில் பணியாற்றி வந்த ஊழியர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விடுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கி இருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானோருக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

வடக்கு கோவாவில் உள்ள அப்போரா பகுதியில் அமைந்துள்ள கடற்கரையோர இரவு விடுதியில் எரிவாயு உருளை வெடித்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் கோவாவில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை பகுதிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தவை.

பொதுவாக நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மற்ற மாதங்களைவிட நான்கைந்து மடங்கு அதிகமாக இருக்கும்.

சனிக்கிழமை (டிசம்பர் 6) நள்ளிரவு வேளையில், வடக்கு கோவாவின் அப்போரா பகுதியில் அமைந்துள்ள இரவு நேர விடுதி ஒன்றில் எரிவாயு உருளை வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதில் இறந்துபோனவர்களில் மூன்று பெண்களும், நான்கு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியினை மேற்கொண்டனர்.

இரவு விடுதியைத் தரைமட்டமாக்கிய அந்தத் தீ, அந்த விடுதியின் சமையலறைப் பகுதியில்தான் மூண்டிருக்க வேண்டுமென நிபுணர்கள் கருதுகின்றனர்.

எனினும் விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கோவா மாநிலக் காவல்துறை தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

விடுதியின் சமையலறையில் பணியில் இருந்த 20 பேர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

இதற்கிடையே, அர்போரா தங்குவிடுதி தீவிபத்தில் பலர் உயிர் இழந்திருப்பது வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அம்மாநில முதல்வர் பிரோமத் ஷாவந்துடன் தொடர்பில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகக் கூறியுள்ளார்.

மேலும் மத்திய அரசு சார்பாக இந்தத் தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த விடுதியில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து விடுதிகளிலும் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை தணிக்கை செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபா வலியுறுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்