கோவா இரவு விடுதி தீ விபத்து: தாய்லாந்துக்குத் தப்பிச் சென்ற உரிமையாளர்கள்

1 mins read
0af7cb56-b742-46e0-bed1-98b4fdffea79
தீக்கிரையான கோவா இரவு விடுதியின் உட்புறம். - படம்: ஏஎஃப்பி

கோவா: கோவா இரவு கேளிக்கை விடுதியில் 25 பேரின் உயிரைப் பறித்த தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த விடுதியின் உரிமையாளர்களான சகோதரர்கள் இருவரும் தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

உரிமையாளர்களில் ஒருவரான கௌரவ் லுத்ரா, தாய்லாந்தின் புக்கெட் விமான நிலையத்தில் காணப்பட்டதைக் காட்டும் படம் ஒன்று இந்திய ஊடகங்களில் வலம்வந்தது.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து சௌரப், கௌரவ் லுத்ரா இருவரும் புக்கெட் தீவுக்குச் செல்லும் விமானத்தில் ஏறியதாக கோவா காவல்துறை திங்கட்கிழமை இரவு தெரிவித்தது.

அவர்களின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு புதுடெல்லி சென்ற அதிகாரிகளுக்கு, இருவரும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டது தெரியவந்தது.

“இது, காவல்துறை விசாரணையைத் தவிர்க்க வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தைக் காட்டுகிறது,” என்று காவல்துறை கூறியது.

இந்நிலையில், சகோதரர்களைத் தேடிப் பிடிக்க அனைத்துலகக் காவல்துறையின் (இன்டர்போல்) உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர்.

இரவு விடுதி தீச்சம்பவம் குறித்து திங்கட்கிழமை தமது ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியிருந்த திரு சௌரப், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துதர உறுதியளித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்