ஜகார்த்தா: கோஜெக் நிறுவனரும் இந்தோனீசியாவின் முன்னாள் கல்வி அமைச்சருமான நதீம் மக்காரீமுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை பத்து ஆண்டுகளிலிருந்து ஒன்பது ஆண்டுகளாகக் குறைத்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தோனீசியப் பள்ளிகளுக்கு கூகல் குரோம்புக் மடிக்கணினி வாங்கியதில் நதீம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், அரசுக்கு 125 மில்லியன் அமெரிக்க டாலர் (S$160.1 மில்லியன்) இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து, கடந்த ஜூன் மாதம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து அவர் ஜூலை 1ஆம் தேதி ஜகார்த்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நதீம் மீதான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று நீதிபதி சதுர் இரியாந்தோ வியாழக்கிழமை (செப்டம்பர் 24) தெரிவித்தார்.
அதேவேளையில், நதீம் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை 809 பில்லியன் ரூப்பியாவிலிருந்து (S$57.9 மில்லியன்) 548 பில்லியன் ரூப்பியாவாகக் குறைக்கப்படுவதாக நீதிபதி சுபாக்ரன் ஹார்டி முல்யானா அறிவித்தார்.
இந்தத் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்ட நதீம், உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்போவதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.
“பாதிக்கப்பட்டது நான் மட்டுமில்லை; இந்தோனீசியச் சட்ட அமலாக்க அமைப்பும் நம்பகத்தன்மையும்தான்,” என்றார் அவர்.
