தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாலியை விழுங்கிய எருமை; இரண்டு மணிநேர அறுவை சிகிச்சைக்குப்பின் மீட்பு

2 mins read
b3deb3c7-424a-41fa-b32b-95e41a285446
எருமையின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட தாலிச் சங்கிலியின் மதிப்பு இரண்டரை லட்ச ரூபாய்வரை இருக்கும் எனச் சொல்லப்பட்டது. - படங்கள்: இந்திய ஊடகம்

நாக்பூர்: சில நேரங்களில் சில உண்மை நிகழ்வுகள் நம்ப முடியாதபடி இருக்கும்.

அப்படியொரு நிகழ்வு இந்தியாவின் மகாரஷ்டிர மாநிலத்தில் இடம்பெற்றது.

வஷீம் மாவட்டம், சர்சி எனும் சிற்றூரில் எருமை மாடு ஒன்று, கிட்டத்தட்ட 40 கிராம் தங்க நகையை விழுங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த எருமையின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து அந்த நகை மீட்கப்பட்டது.

அவ்வூரைச் சேர்ந்த ராம்ஹரி என்ற உழவர், சிறிய தோட்டமும் ஒரு எருமையையும் வைத்துள்ளார்.

இந்நிலையில், சென்ற மாதம் 27ஆம் தேதி தம் தோட்டத்திலிருந்து அவரைக்காயை அவர் பறித்துக்கொண்டு வந்தார். அதனைப் பெற்றுக்கொண்ட அவரது மனைவி, அவரையைத் தனியாக உரித்தபின், தோலை ஒரு தட்டில் போட்டு, தாம் உறங்கும் அறையில் அத்தட்டை வைத்திருந்தார்.

இரவில் உறங்குமுன் தம் கழுத்திலிருந்த தாலிச் சங்கிலியைக் கழற்றிய அவர், அதனையும் அத்தட்டிலேயே வைத்துவிட்டார்.

மறுநாள் காலை அவருடைய குடும்பத்தினரில் யாரோ, தட்டுடன் அவரைக்காய்த் தோலைக் கொண்டுபோய் எருமைக்குத் தீவனமாகப் போட்டுவிட்டார்.

“அன்று நண்பகல்தான் தாலிச் சங்கிலி காணாமல் போனதை அறிந்தோம். முதலில் திருட்டு நடந்திருக்கலாம் என நினைத்தோம். அதன்பின்னரே அவரைக்காய்த் தோலுடன் மாடு தங்கச் சங்கிலியைத் தின்றிருக்கும் என்பதை உணர்ந்தோம். உடனே உள்ளூர்க் கால்நடை மருத்துவரிடம் மாட்டைக் கூட்டிச் சென்றோம்,” என்று விளக்கினார் ராம்ஹரி.

அதன்பின் வஷீமில் இருக்கும் அனுபவமிக்க கால்நடை மருத்துவர் பாலாசாகேப் கௌடின்யாவிடம் அந்த எருமை கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு, உலோக உணர்கருவி மூலம் மாட்டின் வயிற்றில் ஏதோ ஓர் உலோகப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் ‘சோனோகிராபி’ தொழில்நுட்பம் மூலம் வயிற்றுக்குள் அதன் துல்லியமான இடம் கண்டறியப்பட்டது.

இறுதியாக, செப்டம்பர் 29ஆம் தேதி இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்குப்பின் அந்தத் தங்கச் சங்கிலி மாட்டின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட தாலிச்சங்கிலியின் மதிப்பு இரண்டரை லட்ச ரூபாய்வரை இருக்கும் எனச் சொல்லப்பட்டது.

குறிப்புச் சொற்கள்