இந்தியாவில் தங்கத்தின் தேவை 6% சரிவு: உலகத் தங்க மன்றம்

இந்தியாவில் தங்கத்தின் தேவை 6% சரிவு: உலகத் தங்க மன்றம்

2 mins read
8263deae-b25d-4025-afa0-ff149f325d6c
கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 139.7 டன்னாக இருந்த உள்நாட்டுத் தங்கத்தின் தேவை தற்போது 131.4 டன்னாகக் குறைந்துள்ளது.   - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை ஆறு விழுக்காடு குறைந்துள்ளது.

உலக தங்க மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 139.7 டன்னாக இருந்த உள்நாட்டுத் தங்கத்தின் தேவை தற்போது 131.4 டன்னாகக் குறைந்துள்ளது.

அளவு சார்ந்து தேவை சரிந்தாலும், ரூபாய் மதிப்பு அடிப்படையில் அது கூடியுள்ளது.

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 198,100 கோடி ரூபாய் மதிப்பிலான 131.4 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் அதே காலகட்ட மதிப்பைவிட 50 விழுக்காடு அதிகம்.

நகைகள் வாங்குவது 15 விழுக்காடு குறைந்து 75.1 டன்னாகப் பதிவானது. தங்கக் கட்டிகள், நாணயங்களின் விற்பனை ஒன்பது விழுக்காடு அதிகரித்து 50.3 டன்னாக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை அதிகரித்தபோதிலும், பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு, முதலீட்டுச் சொத்தாக மக்கள் அதனைக் கருதுவதே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டது.

தங்கத்தின் மீதான சுங்க வரியை இந்திய அரசு உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து, தங்கக் கடத்தலும் சட்டவிரோதக் கறுப்புச் சந்தை வணிகமும் அதிகரித்துள்ளன.

கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் நாட்டின் இறக்குமதிச் செலவு அதிகரித்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியிருந்தார்.

தேவையின்றித் தங்கம் வாங்குவதைக் குறைத்து அந்நியச் செலவாணி கையிருப்பைச் சேமிக்க உதவுமாறு பொதுமக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இறக்குமதி வரி ஆறு விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இருந்தபோதும், இந்தியர்களிடையே தங்கம் வாங்கும் ஆர்வம் குறையவில்லை.

தங்கச் சந்தை வணிகத் தொகைய (இடிஎஃப்) முதலீடு 49 விழுக்காடு அதிகரித்து 4.2 டன்னாக உயர்ந்தது. மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் 17 விழுக்காடு குறைந்து 19.2 டன்னாகவும், இறக்குமதி 23 விழுக்காடு சரிந்து 98.1 டன்னாகவும் பதிவாகின.

ஜூன் நடுப்பகுதியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.50 லட்சத்திற்குக் கீழ் சரிந்தது விற்பனையை ஊக்குவித்தது.

பண்டிகை, திருமணக் காலங்களால் ஆண்டின் இரண்டாம் பாதியிலும் தேவை வலுவாக இருக்கும் என்றும், 2026ஆம் ஆண்டின் மொத்தத் தேவை 650 முதல் 750 டன்வரை இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்