உயர்ந்து வரும் தங்க விலைகள், இந்திய முதலீட்டாளர்களைத் தங்கக் கட்டிகளையும் காசுகளையும் வாங்கத் தூண்டுகின்றன.
இதன் விளைவாக, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் US$10 பில்லியன் மதிப்பில் சாதனை அளவில் கொள்முதல் செய்யப்பட்டதன் மூலம், மொத்த பயனீட்டில் தங்க முதலீட்டின் பங்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று உலக தங்க மன்றம் வியாழக்கிழமை (அக்டோபர் 30) தெரிவித்தது.
முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுத் தொகுப்புகளைப் பல்வகைப்படுத்துவதாலும் தங்க முதலீட்டில் அனுபவம் இல்லாதவர்கள்கூட சந்தையில் நுழைவதாலும் தங்கம் ஒரு முக்கியச் சொத்தாக மாறியுள்ளதாக மன்றத்தின் இந்தியச் செயல்பாடுகளின் தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் ஜெயின் கூறினார்.
உலகின் இரண்டாவது பெரிய தங்கப் பயனீட்டாளரான இந்தியாவில் தங்க முதலீடு செப்டம்பர் காலாண்டில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அளவு அடிப்படையில் 20 விழுக்காடு உயர்ந்து 91.6 மெட்ரிக் டன்னாகவும் மதிப்பு அடிப்படையில் 67 விழுக்காடு அதிகரித்து US$10.2 பில்லியனாகவும் இருந்தது என மன்றம் தெரிவித்தது.
இருப்பினும், மொத்த தங்கப் பயனீடு 16 விழுக்காடு குறைந்து 209.4 டன்னாக இருந்தது. தங்க விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளதன் காரணமாக ஆபரணத் தங்கத்துக்கான தேவை 31 விழுக்காடு சரிந்து 117.7 டன்னாகக் குறைந்ததே இதற்குக் காரணம்.
2025ன் முதல் ஒன்பது மாதங்களில், மொத்த தங்கப் பயனீட்டில் முதலீட்டுத் தேவை 40 விழுக்காடு பங்கு வகித்தது. இது முன்னெப்போதும் இல்லாத அளவு என்று மன்றம் கூறியது.
பண்டிகைக்காலம், திருமணப் பருவம் காரணமாக அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் தேவை செப்டம்பர் காலாண்டின் தேவையை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுவதாக திரு ஜெயின் சொன்னார்.
ஆயினும், 2025ல் தங்கத்துக்கான மொத்த தேவை 600க்கும் 700 மெட்ரிக் டன்னுக்கும் இடைப்பட்டு இருக்கலாம். இது, கடந்த ஆண்டின் 802.8 டன்னைவிடக் குறைவு என்பதோடு, 2020க்குப் பிறகு மிகக் குறைந்த அளவு என்று திரு ஜெயின் கூறினார்.

