புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியின் ஜோதி நகர் பகுதியில் அமைந்துள்ள ஜெயின் கோயிலின் உச்சியில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசம் திருடு போனதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) தெரிவித்தனர். அதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.40 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கார்வா சவுத் கொண்டாட்டத்தின்போது இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.
திருடப்பட்ட கலசம் ‘அஷ்ட தாது’ (எட்டு உலோகம்) கலவையால் தயாரிக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்கு முன்பு கோயிலின் உச்சியில் நிறுவப்பட்டது. அதில் சுமார் 200 கிராம் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது.
கோயிலில் இருந்த சிசிடிவி கண்காணிப்புக் கேமராவில், திருடன் கம்பத்தின் வழியே கோயில் வளாகத்தில் இறங்கி, கலசத்துடன் இருட்டில் செல்வது பதிவாகியுள்ளது.
இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.
கோயில் நிர்வாகத் தலைவர் நீரஜ் ஜெயின், 58, அளித்த புகாரின் பேரில், ஜோதி நகர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடையாளம் தெரியாத குற்றவாளியைக் கண்டுபிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
ஜெயின் சமூகத்தினரின் புனிதப் பொருள்கள் திருடப்படுவது கடந்த இரண்டு மாதங்களில் இது இரண்டாவது முறை என்பதால், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திருடப்பட்ட கலசம் விரைவில் மீட்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.