மும்பை: பிள்ளையார் சதுர்த்தி விழாவையொட்டி, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள பிரபல இனிப்பகம் ஒன்று, தங்க முலாம் பூசப்பட்ட சிறப்பு கொழுக்கட்டைகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
கிலோ ரூ.27,000க்கு விற்பனையாகும் இந்த கொழுக்கட்டைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நாசிக்கில் செயல்பட்டு வரும் ‘சாகர் ஸ்வீட்ஸ்’ என்ற நிறுவனம், பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 25க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
அதில் பாரம்பரிய சுவையிலான கொழுக்கட்டைகள் முதல் நவீன ரகங்கள் வரை இடம்பெற்றிருந்தாலும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த ‘தங்கக் கொழுக்கட்டை’தான்.
அதிக விலை கொண்டதாக இருந்தாலும், பிள்ளையாருக்குப் படைக்கவும் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடவும் விரும்பும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் பலர் இந்த தங்கக் கொழுக்கட்டைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாகக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மகாராஷ்டிரா முழுவதும் பிள்ளையார் சதுர்த்தி விழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், நாசிக் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆடம்பர தங்கக் கொழுக்கட்டைகள் தொடர்பான செய்திகளும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
