அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையில் மீட்கப்பட்ட 100 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகள், சேதமடையாத ஒரு பகவத் கீதை புத்தகம் உள்ளிட்ட பொருள்களைப் காவலர்களிடம் மீட்புப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபரான 56 வயதுள்ள ராஜு படேல் என்பவர் தனது குழுவுடன் மீட்புப் பணியில் உதவி செய்தார். தொடக்கத்தில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் தனது குழுவினர் உதவியதாகவும் பின்னர் பயணிகளின் உடைமைகளும் விமானப் பாகங்களும் சிதறிக்கிடந்த பகுதியில் விலையுயர்ந்த பொருள்கள் ஏதேனும் உள்ளனவா என்று தேடத் தொடங்கியதாகவும் ராஜு படேல் தெரிவித்தார்.
“இதில் 800 கிராமுக்கு மேற்பட்ட (100 பவுன்) தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கப் பணம், கடப்பிதழ்கள், ஒரு பகவத்கீதை புத்தகம் ஆகியவற்றை மீட்டோம்,” என்றார் அவர்.
மீட்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவை பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.