மீரட்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராம்பூர் நகரைச் சேர்ந்த ஆடவர் நால்வர் அண்மையில் சவூதி அரேபியாவிலிருந்து இந்தியா திரும்பியதாகவும் அவர்களின் வயிற்றில் ‘கேப்சியூல்’ எனப்படும் மருந்து உறை வடிவில் தங்கம் கண்டறியப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
ஆடவர் நால்வரும் கடந்த வெள்ளிக்கிழமை (மே 24) தங்களைக் காப்பாற்றும்படி கார் ஓட்டுநர் மூலம் காவல்துறைக்குத் தகவல் அனுப்பியதாகக் கூறப்பட்டது.
‘ஆயுதமேந்திய குற்றவாளிகள்’ தங்களை முராதாபாத்திலுள்ள லக்னோ-டெல்லி நெடுஞ்சாலையில் கடத்திச் செல்வதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய அந்நால்வரும் டெல்லியிலிருந்து கார் மூலம் சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
இது தங்கக் கடத்தல் சம்பவமாக இருக்கலாம் என்று சந்தேகித்த காவல்துறையினர் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று ஊடுகதிர் பரிசோதனை, ‘சிடி ஸ்கேன்’ ஆகியவற்றுக்கு ஆட்படுத்தினர்.
பரிசோதனைகளின் மூலம் ஆடவர்களின் வயிற்றில் தங்கம் இருப்பது உறுதியானது.
“இதுவரை மொத்தம் 950 கிராம் எடையுள்ள 29 ‘கேப்சியூல்களை’ மருத்துவர்கள் மீட்டுள்ளனர். மேலும் சில ஆடவர்களின் வயிற்றில் இருக்கக்கூடும். அந்த நால்வரையும் விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படக்கூடும்,” என்று முராதாபாத் நகரக் காவல்துறைக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.