பெங்களூர்: இந்தியாவின் சுங்கத்துறை சட்டம் 1962ன்கீழ், பார்வைக் குறைபாடு உள்ள பயணி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆடவர், சுமார் நான்கு கிலோகிராம் எடைகொண்ட தங்கத்தைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. பெங்களூர் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், கடந்த செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 4) அந்த ஆடவரைப் பிடித்தனர். அப்போது அவரிடமிருந்து ரூ 3.44 கோடி (525,302 வெள்ளி) மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்கம் கடத்தியதன் சந்தேகத்தின்பேரில் கன்னட நடிகை ரன்யா ராவ் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 3) பிடிபட்டார். அதற்கு மறுநாள் பார்வைக் குறைபாடு உள்ள அந்த ஆடவர் பெங்களூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்ததாக நம்பப்படுகிறது.
துபாயிலிருந்து பெங்களூர் வந்ததாகக் கூறப்படும் அவரின் சட்டைக்குள் தங்கம் மறைக்கப்பட்டிருந்ததாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்தத் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடத்தல் இடம்பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், சம்பந்தப்பட்ட ஆடவரின் அடையாளத்தை சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.