கோல்கத்தா: இந்திய-பங்ளாதேஷ் எல்லைப் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின்போது, ஏறக்குறைய ரூ.25 கோடி மதிப்பிலான 15.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் உள்ள பான்பூர் எல்லைப் பகுதியில் ரகசியத் தகவலின் அடிப்படையில் எல்லைப் பாதுகாப்புப் படையின் 32வது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் ஒருவரைப் பிடித்துச் சோதனையிட்டதில், அவரிடமிருந்து 15 கிலோ 607 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றின் சந்தை மதிப்பு ஏறக்குறைய ரூ.25 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தங்கம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்குக் கொடுக்கப்பட இருந்தது, அனைத்துலகக் கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கைது செய்யப்பட்ட பெண்ணிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, பிடிபட்ட பெண், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்துடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிருஷ்ணகஞ்ச் காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.


