பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்பின் மறைமுக அனுமதி கிடைத்திருப்பதால் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை இந்தியப் பிரதமராக்கும் பொன்னான வாய்ப்பு பாஜகவுக்குக் கிடைத்துள்ளதாக கர்நாடக முதல்வரும் அம்மாநில மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக தலித் ஒருவரை, குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே பெரை அறிவிக்க அக்கட்சித் தலைமை முன்வருமா என கர்நாடக மாநில பாஜக தலைவரான விஜயேந்திரா கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திரு சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
“மல்லிகார்ஜுன கார்கே மரியாதைக்குரிய அரசியல்வாதி ஆவார். தலித் என்ற கேடயத்தைப் பயன்படுத்தி அவர் அரசியல் ஆதாயம் தேடவில்லை. அவரது வளர்ச்சியானது நீண்ட கால அர்ப்பணிப்பு, நேர்மை, பொதுச்சேவையின் விளைவாகும்.
“அவருக்கு ஒருபோதும் அரசியல் ஆதரவு தேவையில்லை. காங்கிரசில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பது நமது கட்சிதான், பாஜக அல்ல என்பதை நான் மிகவும் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
“தலித் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தும் பாஜகதான் அதற்கான முயற்சியை முதலில் மேற்கொள்ள வேண்டும். கோவிந்த் கர்ஜோல், சாலவேடி நாராயணசாமி ஆகியோரில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக முன்வருமா? அவ்வாறு அறிவித்தால் அக்கட்சிக்கு முதல் பாராட்டு என்னிடம் இருந்துதான் வரும்,” என்று முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், 75 வயதை நிறைவுசெய்தவர்கள் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிரதமர் மோடி 75 வயதை நிறைவுசெய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
“பாஜகவின் விதிப்படி 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். ஆனால், பிரதமர் பதவியை மோடி ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்வார் என பாஜக கூறி வருகிறது,” எனத் தெரிவித்துள்ளார் சித்தராமையா.